Published : 11 Dec 2017 11:01 AM
Last Updated : 11 Dec 2017 11:01 AM

சினிமா, சுரங்கம், பீடி தொழிலாளர்கள் மத்திய அரசு மானிய தொகையுடன் புதிய வீடு கட்ட விண்ணப்பிக்கலாம்

சினிமா, பீடி மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு மானியத் தொகையுடன் வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல அமைப்பில் பீடி, சினிமா மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசால் திருத்தியமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2017-18 ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின்படி, மாத ஊதியம் ரூ.21,000- க்கு மிகாமல் இருக்கும் பீடி, சினிமா மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், தங்களுக்கென வீடு கட்டிக் கொள்வதற்கு, மத்திய அரசு மானியமாக ரூ.1.50 லட்சம் மூன்று தவணைகளில் முறையே 25 சதவீதம் அதாவது ரூ. 37,500 முன்பணமாகவும், 60 சதவீதம் அதாவது ரூ. 90 ஆயிரம் மேல்தளம் முடிவுற்ற நிலையிலும் மற்றும் 15 சதவீதம் அதாவது, ரூ.22,500 முழுவதும் கட்டப்பட்ட பின்பும் தவணைகளாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பீடி, சினிமா மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து குறைந்தது ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும். தொழிலாளர்கள் தங்களுக்கென சொந்தமாக, சுமார் 60 சதுர மீட்டர் அளவு (தோராயமாக 650 சதுர அடி) வீட்டுமனைப் பெற்றிருக்க வேண்டும். எனினும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கும் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தளர்வு அளிக்கப் படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தொழிலாளர்களுக்கு (கணவன், மனைவி) தங்களுக்கென சொந்தமாக வீடு இருத்தல் கூடாது. தொழிலாளர்கள், தங்கள் பெயரிலோ அல்லது தங்களைச் சார்ந்தோர் பெயரிலோ, மத்திய அல்லது மாநில அரசிடமிருந்து ஏற்கெனவே வீடு கட்டுவதற்கு மானியம் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன், இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பயன்பெறும் தொழிலாளர்கள், வேறு எந்த மத்திய அல்லது மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழும் பயனாளியாக இருக்கக் கூடாது.

தொழிலாளர்கள், தங்களது சேமிப்பு வங்கிக் கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழிலாளர்கள், தங்களது வீடுகளை 18 மாதத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும். இந்த வீடுகள் இரண்டு படுக்கை அறைகள், ஒரு முகப்பு கூடம், ஒரு சமையல் அறை, ஒரு குளியல் அறை, ஒரு கழிப்பறை மற்றும் ஒரு துணிகள் உலரவைப்பதற்கான ஒதுக்கிடம் ஆகியவற்றை பெற்றிருத்தல் வேண் டும்.

விண்ணப்பங்களை நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, 8-2A, செயிண்ட் தாமஸ் சாலை, மேட்டு திடல், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627011, தொலை பேசி எண்: 0462 - 2578266 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என பத்திரிகைத் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x