Published : 04 Dec 2017 09:48 AM
Last Updated : 04 Dec 2017 09:48 AM

நான் ஐஏஎஸ் அதிகாரியானதில் ‘தி இந்து’ நாளிதழுக்கு முக்கியமான பங்கு உண்டு: செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் பேச்சு

‘தி இந்து’ மற்றும் ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்திய ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி காஞ்சிபுரம் சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செங்கல்பட்டு சார் ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் பேசியதாவது:

மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது. ஒரே குடும்பத்தில் 5 பேர் அரசு ஊழியர்களாக இருக்கும் சூழலும் இங்குண்டு. ஒரு கிராமத்தில் ஒருவர் கூட அரசுப் பணியில் இல்லாத சூழலும் உண்டு. எல்லா இடங்களிலும் சமமற்ற நிலை நிலவுவதே நம்முடைய சவாலாக உள்ளது.

நகரங்களில் கிடைக்கும் வாய்ப்பு கிராமங்களில் கிடைப்பது இல்லை. ஆனால், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இணையத்தின் வழியே ஒரு புரட்சியை நிகழ்த்தி இருக்கிறது. இதன் விளைவாக கிராமங்களிலும் தற்போது சூழல்கள் கொஞ்சம் மாறியுள்ளன.

திருப்புமுனையான நூலகம்

கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்தவன்தான் நானும். எங்கள் கிராமத்திலிருந்த சிறிய நூலகம் என் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. புத்தகங்களை அடுக்கி வைக்க நூலகருக்கு உதவியாகச் சென்றவன், அப்படியே நூலகமே கதி என்று கிடக்க ஆரம்பித்துவிட்டேன். நாளிதழ் வாசிப்பு அங்கிருந்தே எனக்குத் தொடங்கியது. தமிழில் படித்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பாலகிருஷ்ணனைப் பற்றி ஒரு செய்தியில் படித்தபோது எனக்குள்ளும் ஐஏஎஸ் கனவு துளிர்விட்டது. தமிழ் வழியாகவே ஐஏஎஸ் கனவைச் சாத்தியமாக்கிக் கொண்டேன்.

நான் ஐஏஎஸ் ஆக மிக முக்கியமான காரணம் நாளிதழ் வாசிப்பு. குறிப்பாக என்னை வளர்த்தெடுத்ததில் ‘தி இந்து’ நாளிதழுக்கு முக்கியமான பங்கு உண்டு. ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு நாளிதழ்களையும் வாசித்தாலே பெரிய அளவில் நாம் நம்மை வளர்த்துக்கொள்ள முடியும். குறிப்பாக ‘தி இந்து’ தமிழ் நடுப்பக்கங்கள் பெரிய வரம்! விடாமுயற்சியுடன் தொடர்ந்தால் நிச்சயம் ஐஏஎஸ் தேர்வை ஜெயிக்க முடியும்.

தமிழ் மாணவர்களை அதிகாரக் கனவை நோக்கி நகர்த்தும் ‘தி இந்து’வுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ் உரிமைகளை உரக்கப் பேசும் ‘தி இந்து’, போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தியோடு அந்தந்த மாநில மொழிகளிலும் வெளியாக குரல் கொடுக்க வேண்டும்’’ என்றார் ஜெயசீலன்.

வழிகாட்டுகிறது காஞ்சி!

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசியதாவது:

உலகின் தொன்மையான நகரங்களுள் ஒன்று காஞ்சிபுரம். கிறிஸ்து பிறப்பதற்குப் பல காலம் முன்னரே வரலாற்றில் இடம்பெற்ற ஊர். காஞ்சிக்கு எவ்வளவோ மேன்மைகள் உண்டு. நவீன காலத்தில் காஞ்சி பெற்ற பெரும் முக்கியத்துவம் அண்ணாவைப் பெற்றெடுத்த ஊர் இது என்பது!

சுதந்திர இந்தியா கண்ட மகத்தான தலைவர்களில் ஒருவரான அண்ணா பிறந்த காஞ்சியில், தமிழ் மாணவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியை நடத்துவதில் ‘தி இந்து’ பெருமைகொள்கிறது.

இந்தியா சமத்துவம் மிக்க நாடாக மாற, சமூக தளத்தில் சமூக நீதியையும், அதிகாரத் தளத்தில் மாநில சுயாட்சியையும் தீர்வாக முன்வைத்தவர் அண்ணா.

அதேபோல, இந்தியாவின் ஒவ்வொரு அதிகார மையத்திலும் தமிழர்கள் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும் என்று கனவு கண்டவர். சமத்துவம் குறித்துப் பேசுகையில், அன்றைக்கு அண்ணா பேசிய அதே விஷயங்களைத்தான் இன்றைக்கு நாடு முழுமையும் பேச வேண்டியிருக்கிறது. அந்த வகையில் காஞ்சி இன்று மொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிறது. தமிழ் மாணவர்கள் பிழைப்புக்காகப் படித்தது போதும்; அதிகாரத்தை நோக்கி அவர்கள் நகர வேண்டும்!’’ என்றார்.

சிறப்பு விருந்தினராகத் துணை ஆட்சியர் (பயிற்சி) வி.பி.ஜெகதீஸ்வரன் பங்கேற்றார். ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யின் தலைமை நிர்வாக இயக்குநர் சத்தியஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் ஊக்க உரை நிகழ்த்தினர். சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஜி.சீனுவாசு, கலை ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ‘தி இந்து’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், பயிற்சிக்கான கையேடுகளும் அளிக்கப்பட்டன. ‘தி இந்து’ தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் சந்தா சலுகை விலையில் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களில் சிறந்த 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு இலவசமாக ஓராண்டு ஐஏஎஸ் பயிற்சி வழங்கப்படும் என்று ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x