Published : 30 Sep 2023 11:39 AM
Last Updated : 30 Sep 2023 11:39 AM

அக்.1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள்: பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு

சென்னை: வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பாமக நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணைப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கான நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மிக முக்கியமாக வாக்குச்சாவடி களப்பணியாளர் நியமனம், களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணித்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

அக்டோபர் 2ஆம் நாள் திங்கள்கிழமை அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 3ஆம் நாள் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம அளவிலான கட்சிக் கூட்டங்கள் அக்டோபர் 4ஆம் நாள் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவரவர் கிராமங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அக்டோபர் 5ஆம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

அக்டோபர் 8ஆம் நாள் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கூட்டங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான செயல் திட்டங்கள், வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணித் திட்டங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x