Published : 27 Sep 2023 10:40 AM
Last Updated : 27 Sep 2023 10:40 AM

கர்நாடக அணைகளை நிரப்பும் தாளவாடி காட்டாற்று வெள்ளம்: ஆழ்குழாய் கிணறுகளால் அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்

தாளவாடி சுற்றுவட்டாரங்களில் பெய்யும் மழை வெள்ள நீர், காட்டாறுகள் மூலம் கர்நாடக மாநிலம் சிக்கோலா அணைக்கு பயணிக்கிறது. (கோப்பு படம்)

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில்30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதேபோல, பண்ணாரியை அடுத்த தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அரசு சரணாலயமாக அறிவித்துள்ள பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.

தாளவாடியை சுற்றியுள்ள கிராம விவசாயிகள், வாழை, கரும்பு, தென்னை மற்று தர்பூசணி, முட்டைக்கோஸ், தக்காளி, காய்கறி வகைகளை பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீரில் தொடங்கி, விவசாயம் வரை அனைத்துக்கும் ஆழ்குழாய் கிணறுகள் மூலமே நீர் எடுக்கப்படுகிறது.

காட்டாறுகளின் கர்நாடக பயணம்: இதுகுறித்து தாளவாடியைச் சேர்ந்த விவசாயி முருகசாமி கூறியதாவது: தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 90 சதவீதம் ஆழ்குழாய் கிணறு மூலமே பாசனம் பெறுகின்றன. ஆரம்ப காலத்தில் 300 அடியில் நீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1,000 அடிக்கு மேல் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை. வனப்பகுதியில் மழைப்பொழிவு நன்றாக இருந்தாலும், அவற்றை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்காததே காரணம்.

கர்நாடகாவில் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை, குழாய்கள் மூலம் கொண்டு சென்று குளம், குட்டைகளை நிரப்புகின்றனர். அதனால், அங்கு நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உள்ளது. ஆனால், தாளவாடி, அதிக மழைப்பொழிவு உள்ள தலமலை போன்ற பகுதிகளில் பெய்யும் மழை நீர், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கோலா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது. ஆசனூர் சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழை நீர், கர்நாடகாவில் உள்ள சொர்ணாவதி அணைக்கு செல்கிறது.

காட்டாறுகள் மூலம் மழைநீர் ஆண்டு முழுவதும் கர்நாடகாவுக்கு செல்லும் நிலையில், அதனை தடுப்பணைகள் கட்டி தடுத்தால், நிலத்தடி நீர் மேம்படும். இருக்கும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும் அதிலும் அதிக நீர் தேக்க முடியவில்லை. இந்நிலை நீடித்தால், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் இல்லாமல் தரிசாக மாறி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதோடு, தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளாலும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் விலங்குகளின் குடிநீர் தேவை, மரங்கள், தாவரங்களின் நீர் தேவையும் கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழக எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கர்நாடகாவில் உள்ள
சிக்கோலா அணை (கோப்புபடம்)

பணப்பயிர் சாகுபடி அதிகரிப்பு: இதேபோல, அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலும் ஆழ்குழாய் கிணறுகளால் வனத்தின் வளம் சுரண்டப்பட்டு வருகிறது. பர்கூர் ஊராட்சியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சமவெளியில் இருந்து சென்றவர்கள் இப்பகுதியில் நிலங்களை வாங்கி பணப்பயிர்களை சாகுபடி செய்ய, ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளனர். இதோடு, இப்பகுதியிலும், தங்கும் விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் நிலத்தடி நீரை சுரண்டி வருகின்றன. இதனால் பல கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் நலச்சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் கூறியதாவது: பர்கூர் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளுக்கு தண்ணீர் மிக முக்கிய தேவையாக உள்ளது. பர்கூர் மலைப் பகுதியில், 500க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து பணப் பயிர்களை நடவு செய்துள்ளனர். போதிய மழை இல்லாத காலத்தில் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்னை ஏற்படுகிறது.

யானைகளுக்கு பாதிப்பு: இப்போது பர்கூர் மலையில் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தண்ணீர் உறிஞ்சப்படுவதால் ஓடைகள், தடுப்பணைகளில் உள்ள தண்ணீரும் வெகு விரைவில் நிலம் உறிஞ்சி விடுகிறது. இதனால் யானைகளுக்கு போதிய தண்ணீ்ர் கிடைக்காமல் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. அப்போது யானை- மனித மோதல் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் வனப் பகுதிகளில் பட்டா நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். 500 அடி ஆழத்துக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வனத்துறை விளக்கம்: இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பர்கூர் மலைப் பகுதியில் உள்ள வன செட்டில்மென்ட் நிலங்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும் என வனத்துறை தற்போது அறிவித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மோசமான நிலையில் உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் பட்டா நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை வனத்துறையால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

விதிமுறைகள் இல்லை: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் சிறிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டி, வனவிலங்குகளின் குடிநீர் தேவை தீர்க்கப்படுகிறது. கோடைகாலங்களில் லாரிகள் மூலமும் நீர் நிரப்பப்பட்டு வருகிறது, என்றனர்.

பொதுவாக, ஊராட்சி பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பதிவுசெய்து அனுமதிபெற வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் எத்தனை அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என்ற உத்தரவு இல்லை. இதனால் ஆழ்துளை கிணறு அமைப்பவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் சிறப்பாக விளங்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பர்கூர் வனப்பகுதிகளில் விலங்குகளையும், வனப்பகுதியையும் காப்பாற்றவும், அப்பகுதி விவசாயத்தை காப்பாற்றவும் ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பதில் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

அதோடு, தமிழக வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் கர்நாடக அணைகளுக்கு சென்று சேர்வதை தடுக்கும் வகையில் தடுப்பணைகளை கட்டி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தினால்தான் தான் வனங்களை வாழ வைக்க முடியும், என்கின்றனர் சூழலியலாளர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x