Published : 16 Dec 2017 11:06 AM
Last Updated : 16 Dec 2017 11:06 AM

மாயமான மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்: கடலூரில் ஆளுநர் பன்வாரிலாலிடம் மனு அளித்து கோரிக்கை

ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை இறந்ததாகக் கருதி குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி கடலூருக்கு வந்த ஆளுநர் பன்வாரிலாலிடம் மனு அளிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஆளுநரிடம் பல்வேறு தரப்பினர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இருநாள் பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று சுற்றுலா மாளிகையில் ஆட்சியர் மற்றும் வனம்,வேளாண், கல்வி, மீன், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில் மற்றும் என்எல்சி நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

கடலூர் சுற்றுலா மாளிகையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, பிற்பகல் 1 மணியளவில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று மனு வழங்கினர். ஒவ்வொருவரிடமிருந்தும் மனுக்களைப் பெற்று, அதுகுறித்து கனிவோடு கேட்டறிந்தார். உடன் இருந்த கடலூர் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மனு அளிப்போர் கூறுவதை மொழிபெயர்த்து, ஆளுநரிடம் விளக்கினார். அதைக் கேட்டுக்கொண்ட ஆளுநர், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

மனு அளித்தவர்களில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் கூறுகையில், “கடலூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் கன்னியாகுமரியிலிருந்து மீன் பிடிக்கச் சென்று, மாயமாகியுள்ளனர். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இதுவரை அவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.அரசிடம் நிவாரணம் கேட்டால், மாயமானவர்கள் தொடர்ந்து 7 ஆண்டுகளாகியும் கிடைக்கவில்லை என்றால்தான், மாயமானவர்களை இறந்தவர்களாக கருதி நிவாரணம் வழங்க முடியும் எனத் தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25-ம் தேதிக்குள் வீடு திரும்பி விடுவர். இந்த முறை அவ்வாறு கரை திரும்பாத மீனவர்களை இறந்ததாகக் கருதி, அவர்கள் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமும், நலத்திட்ட உதவிகளையும் வழங்க வலியுறுத்தி மனு ஒன்றை ஆளுநரிடம் அளித்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

“கடலூர்-புதுச்சேரி-மகாபலிபுரம்-சென்னை கிழக்கு கடற்கரை சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ரூ.30 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட கடலூர் நகர புறவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் தலைவர் நிஜாமூதீன் மனு அளித்தார். இதுபோன்று பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் மனுக்களை அளித்தனர்.

ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு

முன்னதாக ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூரில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x