Published : 25 Sep 2023 04:15 AM
Last Updated : 25 Sep 2023 04:15 AM

நெல்லை - சென்னை எழும்பூர், விஜயவாடா - சென்னை சென்ட்ரல் உட்பட 9 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்

நாடு முழுவதும் புதிதாக 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயில் புறப்பட்ட நிலையங்களிலும் தொடக்க விழா உற்சாகமாக நடந்தது.படம்: பிடிஐ

புதுடெல்லி: நெல்லை - சென்னை எழும்பூர், விஜயவாடா - சென்னை சென்ட்ரல் உட்பட நாட்டின் 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

நாட்டின் அதிவேக சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. டெல்லி - வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 பிப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 24 வழித்தடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்படி, நெல்லை - சென்னை எழும்பூர், விஜயவாடா - சென்னை சென்ட்ரல், ஹைதராபாத் - பெங்களூரு, காசர்கோடு - திருவனந்தபுரம், உதய்பூர் - ஜெய்ப்பூர், பாட்னா - ஹவுரா, ரூர்கேலா - புரி, ராஞ்சி - ஹவுரா, ஜாம்நகர் - அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

தமிழகம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், பிஹார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய 11 மாநிலங்களையும், முக்கிய வழிபாட்டுத் தலங்களையும் இந்த ரயில்கள் இணைக்கின்றன.

புதிய இந்தியாவின் அடையாளம்: ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இளைஞர்கள், தொழில் முனைவோர், பெண்கள், பல்துறை நிபுணர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் புதிய இந்தியாவை உருவாக்க அயராது உழைக்கின்றனர்.

இதற்கேற்ப, நாட்டு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் இதுவரை 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில் சேவை இன்று ஒரே நாளில் தொடங்கப்பட்டுள்ளது. இது புதிய இந்தியாவின் அடையாளம் ஆகும்.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். வந்தே பாரத் ரயில்கள்மூலம் நாட்டின் பொருளாதாரமும், சுற்றுலா துறையும் வளர்ச்சி அடைகின்றன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

இந்தியர்கள் பெருமிதம்: கதிசக்தி திட்டம் மூலம் நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. புதிய சரக்கு போக்குவரத்து கொள்கையால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். பல்வேறு ரயில் நிலையங்கள் முழுமையாக பெண்களால் இயக்கப்படுகின்றன. புதிய இந்தியாவின் சாதனைகளால் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றனர்.

கோவை ரயில் நிலையம்: இந்தியாவில் நாள்தோறும் ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை, பல நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் ரயில்வே சேவையை அதிகம் நம்பி உள்ளதால், ரயில்வே துறைக்கான பட்ஜெட் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. புதிய ரயில்கள், புதிய ரயில் பாதைகள், மின்மயமாக்கம், ரயில்வே பாலங்கள் என ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அமிர்த காலத்தில் அமைக்கப்படும் புதிய ரயில் நிலையங்கள் ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலையங்கள் என அழைக்கப்படும். இவை புதிய இந்தியாவின் அடையாளமாக இருக்கும்.

தமிழகத்தின் கோவை, மும்பை சத்ரபதி ரயில் நிலையம், புணே ஆகிய ரயில் நிலையங்களின் ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில், கோவை ரயில் நிலையம் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முன்பு ரயில்வே அமைச்சராக பணியாற்றியவர் தனது சொந்த மாநிலத்தின் நலனில் மட்டுமே அக்கறை காட்டினார். அவரது மாநிலத்துக்காக புதிய ரயில் சேவைகள் அறிவிக்கப்படும். இத்தகைய சுயநலத்தால் ரயில்வே துறை மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் இழப்பை சந்தித்தது.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு, பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு ரயில்வே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாட்டு மக்களுக்கு அழைப்பு: அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்.1-ம் தேதி நாடு முழுவதும் மிகப்பெரிய தூய்மை இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அக்.31-ம் தேதி சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

காந்தி ஜெயந்தி முதல் படேல் பிறந்தநாள் வரை, நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். குறிப்பாக, கைத்தறி, கைவினை பொருட்களை வாங்கி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x