Last Updated : 25 Dec, 2017 04:58 PM

 

Published : 25 Dec 2017 04:58 PM
Last Updated : 25 Dec 2017 04:58 PM

குக்கர் வென்றது எப்படி? - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எழுப்பும் கேள்விகள்

சென்னை ஆர்.கே.நகர்இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி வெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியானஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி வாக்குப்பதிவுக்கு 2 நாள்களுக்கு முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக 2-வது இடத்துக்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுக 3-வது இடத்துக்கும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக நோட்டாவைவிட குறைவான வாக்குகளைப் பெற்று பரிதாபகரமான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன.

3-வது இடத்தில் திமுககடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச் சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார். ஆனால் ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தக்க வைத்த வாக்கு வங்கியை திமுக இழந்துள்ளது.

தொழிலாளர்களும், தலித்களும் நிறைந்த ஆர்.கே.நகரில் இடதுசாரி கட்சிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் கணிசமான ஆதரவு உள்ளது. இக்கட்சிகளின் ஆதரவு இருந்தும் அந்த வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கவில்லை. அதுபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவு இருந்தும் முஸ்லிம்களின் வாக்குகள் திமுகவுக்கு வரவில்லை.

கடந்த நவம்பர் 6-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அதுவரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த திமுக, அதன் பிறகு தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. இதனால் பாஜகவுடன் திமுகவும் நெருங்குகிறது என்ற விமர்சனம் எழுந்தது.

அதே நேரத்தில் தினகரன் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஆர்.கே.நகரில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்களின் வாக்குகள் தினகரனுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குப் பதிவு நாளில் வெளியான 2ஜி அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு திமுகவுக்கு சாதமாக அமைந்தது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக வெளிப்படையாக வைக்கப்பட்ட விமர்சனமும் முஸ்லிம்களை திமுகவுக்கு எதிராக வாக்களிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர்.

தோல்வியடைந்த ஆளும்கட்சி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் அக்கட்சியின் பி அணியாகவே அதிமுக அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சிக்கல்களையும் தாண்டி முதல்வர் பழனிசாமி அரசு நீடிப்பதற்கு மத்திய பாஜக அரசின் ஆதரவே காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறுபான்மையினரின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தினகரனுக்குச் சென்றுள்ளது.

முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு எனது ஸ்லீப்பர் செல்கள் அவர்களிடம் இருப்பதாக தினகரன் தொடர்ந்து சொல்லி வந்தார். கடந்த ஏப்ரலில் இடைத்தேர்தலில் தினகரனுக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்கள்தான் இந்த முறை மதுசூதனுக்காக வேலை செய்தனர். எனவே, அவர்கள் ஸ்லீப்பர் செல்லாக இருந்து உள்ளடி வேலை செய்தார்களா? பணப்பட்டுவாடா செய்ய இந்த ஸ்லீப்பர் செல்கள் தினகரனுக்கு உதவி செய்ததா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. மதுசூதனனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளடி வேலைகள் செய்து வருவதாக ஆர்.கே. நகரில் வெளிப்படையாகவே பேச்சுகள் எழுந்தன. இனி அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள் இதனை உறுதிப்படுத்தலாம்.

பாஜகவுடனும், பிரதமர் மோடியுடனும் நெருக்கம் காட்டினாலும் நீட் தேர்வு, ஜிஎஸ்டி என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை முதல்வர் எடுத்தார். ஆனால், முதல்வரைப் போல ஆளுநர் செயல்படும் அளவுக்கு மத்திய அரசிடம் கட்சியையும், கட்சியையும் அவர் அடகு வைத்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுவும் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கைவிட்ட மீனவ நண்பன்எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியது முதல் மீனவர்கள் அக்கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர். ‘மீனவ நண்பன்', ‘படகோட்டி' போன்ற படங்களில் மீனவராக எம்ஜிஆர் நடித்தது மீனவர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் இருந்தும் மீனவர்கள் நிறைந்த ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

நவம்பர் இறுதியில் ஏற்பட்ட ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பேரழிவைச் சந்தித்தது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களைக் காணவில்லை. அவர்களை மீட்கக்கோரி மீனவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். மீனவர்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும் இதற்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக மீனவர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை அதிமுக இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சவால்களை வென்ற தினகரன் கடந்த ஏப்ரலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரனுக்கு இந்த முறை அது கிடைக்கவில்லை. கடந்த 7-ம் தேதிதான் தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்தது. 14 நாள்களில் குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டுச் சென்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேண்டியவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டதாகவும், தேர்தல் கெடுபிடிகள் அமலுக்கு வரும் முன்பே தினகரன் ஆதரவாளர்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் பி.வெற்றிவேல் வெளியிட்டார். இதுவும் தினகரனுக்கு ஓரளவு கை கொடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இடதுசாரி, முஸ்லிம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் தவிர காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் ஆதரவு இருந்தும் திமுக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, “திமுக கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பாஜகவையே கடுமையாக விமர்சித்தன. ஆனால், பாஜகவை விமர்சிப்பதில் திமுக மென்மையானப் போக்கை கடைப்பிடித்தது. ஆனால், தினகரன் மதவாத கட்சி என பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதனால் தலித், சிறுபான்மையினர் வாக்குகள் தினகரனுக்குச் சென்றிருக்கலாம்'' என்றார்.

பரிதாப நிலையில் பாஜக கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கைஅமரன் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அவர் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் கடைசி நேரத்தில் சரத்குமார் கட்சியில் இருந்து வந்த கரு.நாகராஜன் வேட்பாளராக்கப்பட்டார். வேட்பாளரையே முடிவு செய்ய முடியாமல் தடுமாறிய பாஜகவால், வாக்காளர்களைக் கவர முடியவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சி, நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 2,928 வாக்குகளைக் கூட பாஜக பெறவில்லை.

அதிமுக தலைமை மாறுமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் தினகரன் பெற்றுள்ள வெற்றியால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. இனி அரசியலில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. அதிமுக-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அக்கட்சிக்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. இதனால் கட்சித் தலைமை மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x