Published : 24 Dec 2017 09:28 PM
Last Updated : 24 Dec 2017 09:28 PM

ஆர்.கே.நகர் வெற்றிக்கு திமுக-தினகரன் கூட்டு சதியே காரணம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், தினகரனும், திமுகவும் செய்த சதியின் வெளிப்பாடாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ''தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகரில் திமுக பெற்றிருக்கிறது. ஆர்.கே.நகரில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை திமுகவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். திமுகவும் டிடிவி தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டு சதியை அறிந்து பதவிக்காக இப்படியும் செய்வார்களா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இரட்டை இலை சின்னத்தை தோற்கடிப்பதன் மூலம் ஒன்றுபட்டு அசைக்க முடியாத சக்தியாக நிற்கும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட வேண்டும், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு தினகரனும், திமுகவும் செய்த சதியின் வெளிப்பாடாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ஏற்படுத்திக்கொண்ட ரகசிய உடன்பாட்டின விளைவுதான் இந்த தேர்தல் முடிவுகள். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன் தனது வாக்கு வங்கியை தினகரனுக்கு திருப்பிவிட்டு அவரை வெற்றி பெறச் செய்திருக்கிறது திமுக. இது தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திருமங்கலம் ஃபார்முலா என்ற புதிய சொல்லை திமுக உருவாக்கியது. அதே வழியில் ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர்.

ஆர்.கே.நகரில் ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்த தினகரன் குழுவினர், பிரச்சாரத்தின் கடைசி நாளில் 20 ரூபாய் தாள்களை வீடு வீடாக வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற்றதும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று மக்களை நம்பவைத்து ஏமாற்றி உள்ளனர். தினகரனின் இந்த வெற்றி அதிமுகவுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது. அதிமுகவை பிளவுபடுத்தவோ, அசைத்துவிடவோ முடியாது. ஜெயலிதாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் எங்கள் பணிகளை தொடர்வோம்'' என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x