Published : 23 Sep 2023 08:28 PM
Last Updated : 23 Sep 2023 08:28 PM

தென்முடியனூர் கிராமத்தில் 8 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கோயில்: பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ததால், கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் இன்று (செப்.23) மாலை திறக்கப்பட்டதும் பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில், 80 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டன. இதை எதிர்த்து ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் அறிவிப்பு வெளியானதால், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. பின்னர், ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பட்டியலின மக்கள் கடந்த ஜனவரி 30-ம் தேதி வழிபாடு செய்தனர்.

அதன்பிறகு முத்துமாரியம்மன் கோயில் மூடப்பட்டன. கடந்த 8 மாதமாக கோயில் பூட்டிகிடந்தது. பட்டியலின மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தன. முத்துமாரியம்மன் கோயிலை திறந்து, பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தின. இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 20-ம் தேதி மனு அளித்தன.

இந்த மனுவில், “80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கடந்த ஜனவரி 30-ம் தேதி பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். அதன்பிறகு, கோயில் பூட்டப்பட்டு, நேற்று வரை திறக்கவில்லை.

மேலும் பட்டியலின மக்களை மற்றவர்கள் புறக்கணித்தனர். கம்யூனிஸ்ட் இயக்க முன்னணி தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு நாளான வரும் 30-ம் தேதி, மூடி கிடக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலை திறந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்யும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், தென்முடியனூர் கிராமத்தில் 8 மாதமாக முடப்பட்டுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர், கோயிலை இன்று(செப்டம்பர் 23-ம் தேதி) திறந்து சுத்தம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.ராமதாஸ், மாவட்டச் செயலாளர் ப.செல்வன் ஆகியோர் தலைமையில், காவல்துறையினர் பாதுகாப்புடன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் இன்று(செப்டம்பர் 23-ம் தேதி) மாலை மீண்டும் வழிபாடு செய்தனர். அப்போது அவர்கள், கோயிலை தினசரி திறக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் கூறும்போது, “ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமையை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கடந்த ஜனவரி 30-ம் தேதி பெற்று தந்தனர். அதன்பிறகு, கோயில் மூடப்பட்டது. இது குறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம்.

அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோயில் இன்று மாலை திறக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். கோயில் தினசரி திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலை நாளை தெரியவரும். கோயில் மீண்டும் மூடப்பட்டால், வரும் 30-ம் தேதி ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x