Published : 23 Sep 2023 05:21 PM
Last Updated : 23 Sep 2023 05:21 PM

நிதி வழங்காத ‘டாஸ்மாக்’ நிறுவனம் - 7 சிறப்பு ‘போதை மறுவாழ்வு மைய’ வார்டுகள் மூடப்படும் அபாயம்!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ‘குடி மற்றும் போதை மறுவாழ்வு மைய வார்டு’ | கோப்புப் படம்

மதுரை: ‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) இருந்து நிதி வராததால் தமிழகத்தில் 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த அரசு குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் வார்டு தொடர்ந்து நடத்த முடியாமல் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மையங்களுக்காகவே பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எதிர்காலமும், குடிநோயாளிகளுக்கு இதுவரை கிடைத்து வந்த சிறப்பு சிகிச்சையும், கவனிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல சிகிச்சைத்துறை செயல்படுகிறது. இந்தத் துறையில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் போதை மற்றும் குடிநோயாளிகள் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். உள் நோயாளியாக சிகிச்சை பெறுவதற்கு போதை மற்றும் குடிநோயாளிகளுடன் அவர்கள் உறவினர் ஒருவர் ‘அட்டெண்ட்டர்’ ஆக இருக்க வேண்டும். அதனாலே, மனநலத் துறையில் போதை மற்றும் குடிநோயாளிகள் உள் நோயாளியாக சிகிச்சைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அதனாலே, குடி மற்றும் போதை நோயாளிகள் சிகிச்சை எடுக்காமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி, கோவை, வேலுார் ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (டாஸ்மாக் நிறுவனம்) மூலம் நிதி ஒதுக்கப்பட்டு குடி மற்றும் போதை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு குடி மற்றும் போதை மறுவாழ்வு மைய சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டன.

இந்த வார்டுகளில் உடன் உறவினர் (அட்டெண்டர்) இல்லாவிட்டாலும் குடி மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இந்த வார்டுகளில் தற்காலி பணியில் செவிலியர்கள், மன நல ஆலோசகர்கள், இதர மருத்துவப் பணியாளர்கள் 12 பேர் வரை பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மனநல மருத்துவத் துறை மருத்துவர்கள், ஆலோசனையில் இவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர்.

டாஸ்மாக் நிறுவனம் ஒதுக்கும் நிதியை கொண்டு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு வார்டுகள் இயக்கப்பட்டு வந்தன. டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்கப்படும் மதுவால் பாதிக்கப்படும் குடிநோயாளிகளுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் வழங்கக் கூடிய வகையில், அந்த நிறுவன வருவாயின் ஒரு பகுதி இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த சிறப்பு வார்டுகள் தொடங்கிய 2-வது ஆண்டில் டாஸ்மாக் நிறுவனம் நிதி ஒதுக்கவில்லை. அதனால், தற்போது இந்த சிறப்பு வார்டில் பணிபுரிந்த செவிலியர், மனநல ஆலோசகர்கள், இதர பணியாளர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த வார்டில் சிகிச்சைப்பெற்ற வந்த நோயாளிகள் இதுவரை கிடைத்த சிறப்பு சிகிச்சைகள், கவனிப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மனநலத் துறையை சேர்ந்தவர்கள் கூறியது: “கடந்த சில மாதமாக இந்தச் சிறப்பு வார்டில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியம் வரவில்லை. அதனாலே, அவர்களுக்கும், தேசிய சுகாதாரதிட்ட அதிகாரிகளுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. அதனால், நிதியில்லாமல் அவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க விரும்பாமல் நீக்கப்பட்டுள்ளனர். மது, போதையால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை, ‘அட்டெண்டர்’ இல்லாமலே இந்த வார்டில் சேர்த்து சிகிச்சை வழங்கப்பட்டதால், மக்களிடம் பெரும் வரவேற்பை இந்தத் திட்டம் பெற்றது.

இந்த வார்டில் அனுமதிக்கப்பட்ட குடி மற்றும் போதை நோயாளிகளுக்கு உடல் மற்றும் மனநல சிகிச்சைகள், மன நல மருத்துவ சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகள், உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தைப் போக்க உள் அரங்க விளையாட்டுகள், யோகா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வார்டில் பணிபுரிந்த செவிலியர்கள், மன நல ஆலோசகர்கள், உளவியல் ஆலோசர்கள் நீக்கப்பட்டதால் இனி மனநல உள் நோயாளிகள் வார்டில் கிடைக்கும் பொதுவான வழக்கமான சிகிச்சையே கிடைக்கும். இதுவரை கிடைத்து வந்த தனி கவனிப்பும், பயிற்சிகள், மனநல ஆலோசனைகள் கிடைக்க வாய்ப்பில்லை.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களும் திகைத்துப்போய் உள்ளனர். போதை, குடிப்பழக்கத்தால் இந்த சமூகம் அடிமையாகி வந்தநிலையில் மக்களிடம் வரவேற்பு பெற்ற நல்லதொரு திட்டம் நிதியில்லாமல் முடங்கும் அபாயம் உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த 7 மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இந்த சிறப்பு வார்டுகளை செயல்படுவதற்கு ரூ.3.5 கோடி அளவிலே நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி வராததாலே இந்த வார்டில் பணியில் பணிபுரிந்த பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால், டாஸ்மாக் நிறுவனம் வழங்க வேண்டிய நிதியை முறையாக பெற்று இந்த சிறப்பு வார்டுகளை முன்போல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “டாஸ்மாக் நிறுவனம் நிதி வழங்காததால் அந்த வார்டில் பணிபுரிந்த தற்காலிக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். வேறு எதுவும் தெரியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x