Last Updated : 22 Sep, 2023 07:31 PM

29  

Published : 22 Sep 2023 07:31 PM
Last Updated : 22 Sep 2023 07:31 PM

‘ஊதிய நிலுவை வழங்க பணம் இல்லையெனில் பேருந்துகளை விற்றுத் தரவேண்டியது தானே!’ - உயர் நீதிமன்றம் ஆவேசம்

மதுரை: ''அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க போதுமான நிதி இல்லை என்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டியது தானே'' என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 1.04.2014 முதல் 31.01.2017 வரை வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவை தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக 2016-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதிய விகிப்படி 6 மாதத்தில் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் மேலாண் இயக்குநர் ஆறுமுகம், முன்னாள் மேலாண் இயக்குநர் முருகேசன், பொதுமேலாளர் இளங்கோவன், முன்னாள் பொது மேலாளர் ராஜேஸ்வரன் (ஓய்வு) ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''உயர் நீதிமன்றம் 2016-ல் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை. செய்த பணிக்கு உரிய ஊதியம் மட்டுமே கேட்கின்றனர். அரசுப் போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்களும், தற்காலிக ஊழியர்களும் பேருந்துகளை இயக்கினால் மட்டுமே பேருந்துகள் இயங்கும்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்களும், நிரந்தர ஓட்டுநர்களும் பேருந்துகளை இயக்குவதில் வேறுபாடு இல்லை. இரு பணியாளர்களும் பொது மக்களுக்காகவே பணிபுரிகின்றனர். இருவரும் ஒரே மாதிரிதான் பேருந்துகளை இயக்குகின்றனர். ஆனால், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது. முறையாக பணி செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது.

ஊதிய நிலுவை வழங்க நிதி பற்றாக்குறையை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. போதுமான நிதி இல்லை என்றால் 5 பேருந்துகளை விற்று பணத்தை கொடுக்க வேண்டியது தானே? நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்க வேண்டாம். நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என நினைக்க வேண்டாம். நீதி வழங்குவதற்காக நீதிமன்றம் எப்போதும் இயங்கும். விடுமுறை நாட்களில் கூட நீதிமன்றங்கள் முக்கிய வழக்குகளை விசாரிக்கின்றன. அதுபோலவே போக்குவரத்துத் துறையில் பொதுமக்களுக்காக அனைத்து நாட்களும் பேருந்துகளை இயக்குகின்றனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பது, தாமதம் செய்வது நல்ல செயல் அல்ல.

நீதிமன்ற உத்தரவை நினைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும். நீதிமன்ற உத்தரவுகளை மதித்து அதனை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில் தான் உள்ளது. விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x