Last Updated : 15 Dec, 2017 09:11 AM

 

Published : 15 Dec 2017 09:11 AM
Last Updated : 15 Dec 2017 09:11 AM

தப்பும்போது தவறவிட்ட துப்பாக்கியே எமனானது: பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்டது எப்படி? - அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள்

ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கொள்ளை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும்போது நழுவிவிழுந்த அவரது துப்பாக்கியே எமனாகிவிட்டது.

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்று நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரின் உறவினர்களான சென்னாராம் (60), சங்கர்லால் (40), ஜனராம் (55), கீதாராம் (49) ஆகிய 4 பேரை கைது செய்திருந்தனர்.

முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரைப் பிடிக்க மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் ஆய்வாளர் முனிராஜ் தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து ராஜஸ்தானில் முகாமிட்டிருந்தனர். பாலி மாவட்டம் ராமாவாஸ் என்ற பகுதியில் நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை உறுதி செய்துகொண்ட தனிப்படையினர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் ராஜஸ்தான் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் நாதுராம் பதுங்கியிருந்த இடத்துக்கு சாதாரண உடையில் சென்றுள்ளனர்.

அங்குள்ள ஒரு வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். ஒரு அறையில் தனியாக இருந்த தினேஷ் சவுத்ரியை துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நாதுராம் எங்கே? என ஆய்வாளர் பெரியபாண்டியன் இந்தியில் கேட்டுள்ளார். மற்றொரு அறையில் இருப்பதாக தினேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அந்த அறைக்கு தனிப்படை போலீஸார் தினேஷ் சவுத்ரியுடன் சென்றுள்ளனர். அங்கு ஆண், பெண் என சுமார் 10 பேர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதில், நாதுராமை மட்டும் தனிப்படை போலீஸார் எழுப்பியுள்ளனர். போலீஸாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், தப்பியோட முயன்றுள்ளார். அவரையும் தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கண்விழித்தனர். துப்பாக்கி முனையில் தினேஷ் சவுத்ரி நிற்பதை பார்த்ததும் கூச்சலிட்டுள்ளனர். சென்னை போலீஸார் நிலமையை விவரிப்பதற்குள் ஒருவர் அங்கிருந்த கம்பை எடுத்து ஆய்வாளர் முனிராஜ் முகத்தில் தாக்கியுள்ளார். இதில், அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. கண் இமைக்கும் நேரத்துக்குள் வீட்டுக்குள் இருந்தவர்கள் தமிழக போலீஸார் மீது கம்பு, கற்கள், பாட்டில்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமை சரியில்லாததால் பின்வாங்குவதே சரியாக இருக்கும் என கருதிய தனிப்படை போலீஸார் சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுவர் ஏறி குதித்து வெளியே தாவியுள்ளார். அப்போது அவரது துப்பாக்கி நழுவி விழுந்துவிட்டது. அதை அவர் கவனிக்கவில்லை. அங்கிருந்த இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் வெளியில் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டார். அதற்குள் பெரிய பாண்டியனின் துப்பாக்கி, நாதுராம் தரப்பினரிடம் சிக்கியது. வேறு வழி இல்லாததால் பெரியபாண்டியன் வந்த வழியே திரும்பிச் செல்ல முயன்றார். அப்போது, எதிரில் நின்றிருந்த நாதுராமின் ஆட்களில் ஒருவர், தன்னிடம் சிக்கிய துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், ஒரு தோட்டா பெரிய பாண்டியன் இடது மார்பை துளைத்ததில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தான் தவறவிட்ட துப்பாக்கி தனக்கே எமனாகும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.

போலீஸாரிடையே ஒருங்கிணைப்பு அவசியம்

ராஜஸ்தானில் கொள்ளையர்களை கைது செய்ய 2 ஆய்வாளர்கள் தலைமையில் 10-க்கும் குறைவான போலீஸார் மட்டுமே சென்றுள்ளனர். ராஜஸ்தான், பிஹார் போன்ற வடமாநிலங்களில் குற்றவாளிகள் துப்பாக்கி வைத்திருப்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. எனவே, இந்த மாநிலங்களில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் முன் திட்டமிடலும், வெளிமாநில போலீஸாருடனான ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியம். ஆனால், பெரியபாண்டியன் விவகாரத்தில் அவ்வாறு திட்டமிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வெளி மாநில காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேச வேண்டும். அவர்கள் வெளி மாநிலத்துக்கு சென்ற பின்னர் யாரை சந்திக்க வேண்டும் என்பது தமிழகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பே உறுதி செய்யப்பட வேண்டும். இதன்படி தனிப்படை போலீஸார் திட்டமிட்டு அங்கு சென்று குற்றவாளிகளை பிடித்து வருவார்கள். தற்போது ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் அதுபோன்று திட்டமிட்டு செயல்பட்டார்களா என்று தெரியவில்லை. மேலும், உள்ளூர் போலீஸாரின் உதவியையும் நாடவில்லை.

அவர்களிடம் தகவல் தெரிவித்தால் ரகசியம் வெளியே தெரிந்து விடும் என்றுகூட சென்னை தனிப்படையினர் நினைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இனிவரும் காலங்களிலாவது காவல்துறையில் உள்ளவர்களின் உயிர் இழப்பை தடுக்க, சரியான ஒருங்கிணைப்பு அவசியம் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x