Last Updated : 21 Sep, 2023 02:44 PM

7  

Published : 21 Sep 2023 02:44 PM
Last Updated : 21 Sep 2023 02:44 PM

“நீட் தேர்வு தகுதியற்றது ஆகிவிட்டதாக சொல்வது அர்த்தமற்றது” - ஆளுநர் தமிழிசை கருத்து

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

புதுச்சேரி: “நீட் தேர்வு தகுதியற்றதாகிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது. அது, புரிந்துகொள்ளாமல் சொல்வது” என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "கல்வியறை எவ்வளவு முக்கியமோ அதே அளவில் கழிப்பறைகளும் முக்கியம் என்றார் பிரதமர். அது மட்டுமின்றி கழிப்பறைகள் கட்ட ஆரம்பித்த பின்பு பெண் குழந்தைகள் பெரியவர்களான பின்பும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வருவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம்.

நீட் தேர்வில் தவறான கருத்து சிலரால் முன்னிறுத்தப்படுகிறது. ஜீரோ மதிப்பெண் வாங்கினால் கூட நீட்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படலாம். அப்படியானால் நீட் தேர்வு எந்தவித பயனும் இல்லை. இது தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது என்றெல்லாம் தமிழக முதல்வர் உட்பட பலர் எக்ஸ் வலைதளத்தில் போடுகின்றனர். அது என்னவென்றால், நீட்டில் தேர்வாகி இருக்க வேண்டும். ரேங்கிங் இருக்கிறது. அதே நேரத்தில் இடங்கள் சில நேரங்களில் காலியாக இருக்கும்போது தகுதி வாய்ந்தவர்களாக இருந்து, முதல் ரேங்கில் வரமுடியாதவர்கள் இதில் சேரலாம் என்பதுதான். இது உயர் மருத்துவக் கல்விக்கு மட்டும்தான்.

உயர் மருத்துவக் கல்வி படிக்கும்போது அவர்கள் எம்.பி.பி.எஸ், எம்.டி முடித்துவிட்டு வருகின்றனர். ஆகவே, அவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வாகிவிடுகின்றனர் என்ற வகையில் இடங்கள் காலியாகாமல் இருப்பதற்கும், தகுதி வாய்ந்தவர்கள் சில இடங்களில் சேர உதவிகரமாக இருக்கும். ஏற்கெனவே இது மணிப்பூர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் நீட் தேர்வு தகுதியற்றதாகவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது. இது புரிந்து கொள்ளாமல் சொல்வது.

நீட் தேர்வு தேவை. இது ஒரு மறு சீரமைப்பு என்று சொல்லலாம். மாணவர்களுக்கு பலன் தருவது என்றும் சொல்லலாம். பிரதமர் எவற்றையெல்லாம் சீர்த்திருத்த முடியுமோ அவற்றையெல்லாம் சீர்த்திருத்திக் கொண்டிருக்கிறார். தமிழகம், புதுச்சேரியில் சில பேர் நீட் தேர்வை எதிர்கின்றனர். அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இதை சாதாரணமாக அரசியலில் எதிர்த்துக் கொண்டு வரமுடியாது. பல மாநிலங்கள் இதனை வரவேற்கிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து தேர்ச்சி பெறுகின்றனர்.

தயவு செய்து அரசியல் வாதிகள் அவநம்பிக்கை ஏற்படுத்துவதைவிட, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் கிடைத்தாலும் கூட அதையும் தாண்டி தங்கள் இடங்களை பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறைக்கு சொல்லியிருக்கிறோம். அடுத்த ஆண்டு 10 சதவீதத்தை மீறி அரசு பள்ளி மாணவர்கள் இடங்களை பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனவே, தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் மீது அவநம்பிக்கையை திணிக்காமல் அவர்கள் படிக்க உதவி செய்ய வேண்டும். புதுச்சேரியில் எந்த நல்லது நடந்தாலும், அதனை தமிழகம், தெலங்கானாவில் சொல்லி வருகின்றேன். எல்லா இடத்திலும் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. செயல்படாத திட்டங்கள் எதுவும் இல்லை.

எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.300 குறைத்துள்ளோம். துணைநிலை ஆளுநர் என்ற முறையில் ரூ.300 குறைத்துள்ளேன் என்று இங்கு சொல்வேன். தமிழகத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில், ஏன் நீங்கள் ரூ.100 குறைப்போம் என்று சொன்னதை செய்யவில்லை என்று கேட்பேன்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x