Published : 21 Sep 2023 05:01 AM
Last Updated : 21 Sep 2023 05:01 AM

மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் - தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். வீட்டின் வாசலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார். படம்: ம.பிரபு

சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு, முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகத்தின் 4 அனல்மின் நிலையங்கள், அவற்றுக்கு மின்சாதனப் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின்கீழ் (டான்ஜெட்கோ) எண்ணூர், அத்திப்பட்டு புதுநகர் (வடசென்னை), தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய 4 இடங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யும் அனல்மின் நிலையங்கள் உள்ளன. கப்பல், லாரி, ரயில்களில் வந்திறங்கும் நிலக்கரியை எடுத்துச்செல்ல இங்கு பெரிய கன்வேயர்பெல்ட்கள், பல்வேறு மின்சாதனபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கருவிகளை 4 தனியார் நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இதில் அதிக அளவில் முறைகேடு, வரிஏய்ப்பு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 4 நிறுவனங்களின் தலைமை அலுவலகம், இயக்குநர்களின் வீடுகள்,மின்வாரியத்துக்கு பொருட்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடுகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், எம்ஜிஆர் நகர், ஜாபர்கான்பேட்டை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், எருக்கஞ்சேரி, துரைப்பாக்கம், பொன்னேரி, செங்கல்பட்டு என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் 250-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனம், சென்னையை மையமாக கொண்டு செயல்படும் வடமாநில நிறுவனம், இன்டர்ஃபேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்றது. சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் மகேந்திர ஜெயின், சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல்சாவடியில் உள்ள சென்னை ராதா இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இந்த நிறுவனம் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக தூத்துக்குடி அனல்மின் நிலையம், வஉசி துறைமுகத்தில் உள்ள கரித்தளத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கன்வேயர் பெல்ட் கட்டுமானம், பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சிறிய ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 850-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அந்த நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அனல்மின் நிலையங்களில்..: எண்ணூர், வடசென்னை (அத்திப்பட்டு புதுநகர்), மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று, கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தரமானதாக உள்ளதா, அவற்றின் விலை, நிதிகணக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். அனல்மின் நிலையவளாகங்களில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கோப்புகளை கைப்பற்றி விசாரித்தனர். இந்த சோதனையில், போலி ரசீதுகள் தயாரித்து வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், ரசீதுகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

20 ஆண்டுகால தகவல்கள்: இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த 20 ஆண்டுகால தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. சோதனை மேலும் சில நாட்கள்நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதுமுடிந்த பிறகே, சோதனையின்போது கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு, ரொக்கம், முறைகேடு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக தெரியவரும். அதன்பின்னர், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதுவரை எந்த தகவலையும் வெளியிட முடியாது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x