Last Updated : 19 Sep, 2023 08:13 PM

 

Published : 19 Sep 2023 08:13 PM
Last Updated : 19 Sep 2023 08:13 PM

“நாட்டை பிளவுபடுத்த பாஜக முயற்சி” - கேரள தொழில் துறை அமைச்சர் விமர்சனம்

நாமக்கல்: “மாநிலங்களின் ஒருங்கிணைந்த அரசுதான் மத்திய அரசு. ஆனால், பாஜக அரசு இதனைப் பிரிக்க முயற்சிக்கிறது” என கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் பேசினார்.

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கலில் தொடங்கியது. 3 நாட்கள் இம்மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பில் விவாதம், தொகுப்புரை, அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன. மாநாட்டை கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் தொடங்கி வைத்துப் பேசியது: “பல வகுப்புகளையும் பிரிவுகளையும் கொண்ட நமது நாட்டை பாரத் என அழைக்கக் கூடாது. இந்தியா என்று அழைப்பதே சரியாக இருக்கும். பாஜக தலைமையிலான அரசு ஒற்றை தலைமையை நோக்கிச் செல்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமைகள் நமது நாட்டின் அடையாளமாக உள்ளது. பழங்குடியினர் ஆதிவாசிகளின் பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். தேசிய மொழியாக எதுவும் இல்லை. இந்தி என்பது அலுவல் மொழி மட்டுமே ஆகும். அந்தந்த மாநில மொழிகளில் மட்டுமே அரசு செயல்படுகிறது. ஆனால், இதனை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. சமஸ்கிருதம், இந்தி ஆகியவற்றை திணிக்க பாஜக முயற்சிக்கிறது. நாடாளுமன்ற அமைப்பிற்கு எதிராக மத்திய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் போன்ற பாதையில் செல்கிறது. மாநிலங்களின் ஒருங்கிணைந்த அரசுதான் மத்திய அரசு, ஆனால் பாஜக அரசு இதனைப் பிரிக்க முயற்சிக்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் ஐந்தாம் இடத்தில் உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைந்துள்ளது. ஆனால் பெரும் நிறுவனங்கள் வளர்ச்சியடைகின்றன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. இது மத்திய பாஜக அரசின் திட்டங்கள் வெற்றி அடையவில்லை என்பதை காட்டுகிறது. ஆதிவாசி மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த நிலத்தை, தொடர்ந்து பயன்படுத்த உரிமை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆதிவாசி மக்களுக்கான நில உரிமையை வழங்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, நேர்மையான ஜனநாயகம் தான் இன்று தேவைப்படுகிறது. கரோனா பாதித்த காலத்தில் 80 சதவீத மக்கள் மிகவும் வறுமை நிலையில் இருந்தனர். அதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. இந்தியாவில் பண வீக்கம் அதிகரித்துள்ளது. காய்கறிகள் மசாலா பொருட்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. பட்டியலின மக்கள், ஆதிவாசி மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வகுப்பு வாரியாக வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பெரிய நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை. இதனால்தான் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. 3 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆதிவாசி மக்களுக்கான வேலை வாய்ப்பில்லை.

கனிம வளம் மிக்க வனப் பரப்புகள், பெரிய நிறுவனங்களுக்கு செல்கின்றன. பட்டியலின மக்கள், ஆதிவாசிகள் வீடு இல்லாமல் நிலம் இல்லாமல் உள்ளார்கள். அவர்களுக்கான நிதி உதவிகளும் படிப்பதற்கு கல்வி நிதி உதவியும் தாராளமாக வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இந்திய எஸ்சி, எஸ்டி மாணவர்கள் அதிக அளவில் படிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

கேரளாவில் எஸ்சி, எஸ்டி மக்கள் வாழும் காலனிகளில் கல்வி, மின்சாரம் போன்ற வசதிகளை அதிக அளவில் மாநில அரசு ஏற்படுத்தி தருகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, கேரள மாநில மட்டுமே இணையதள வசதியை அடிப்படை உரிமையாக அறிவித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்சி, எஸ்டி காலனிகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கேரளாவில் எஸ்சி, எஸ்டி மக்கள், அதிக அளவில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்” என்றார்.

முன்னதாக, நாமக்கல்லில், இந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் பாபுராவ் கொடியேற்றி வைத்தார். ஆதிவாசி உரிமைகளுக்கான அகில இந்திய துணைத் தலைவர் பிருந்தா காரத், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய அமைப்பாளர் ஜிதேந்திர சவுத்ரி, வரவேற்பு குழு தலைவர் டில்லி பாபு, 18 மாநிலங்களின் ஆதிவாசி உரிமைகளுக்கான அமைப்பின் நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x