Last Updated : 16 Sep, 2023 08:40 PM

 

Published : 16 Sep 2023 08:40 PM
Last Updated : 16 Sep 2023 08:40 PM

மேட்டூர் அணை நீர் இருப்பு 13 டிஎம்சி ஆக சரிவு: கேள்விக்குறியாகும் சம்பா, தாளடி சாகுபடி!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் இருப்பு 13 டிஎம்சியாக குறைந்துள்ளது. இதனால் சம்பா, தாளடி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றைய தினம் நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், அணையில் இருந்து அதிகபட்சமாக 14 ஆயிரம் கன அடி, குறைந்தபட்சமாக 6,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 2,707 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,047 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 41.76 அடியாகவும், நீர் இருப்பு 13.01 டிஎம்சியாகவும் உள்ளது. 28 மாவட்ட மக்களின் குடிநீர், மீன் வளத்துக்காக 9 டிஎம்சி வரை நீர் இருப்பு வைக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரை 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்பட்டது. அதில், அணையில் இருந்து 99.74 டிஎம்சி நீர், மழை மற்றும் நிலத்தடி நீரிலிருந்து 25.26 டிஎம்சி நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து இதுவரை 78 டிஎம்சி தண்ணீர் மட்டுமே குறுவை சாகுபடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதி வரை 101 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும். ஆனால் செப்டம்பர் 12-ம் தேதி வரை 37.80 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களுக்கு முழுமையாக கிடைக்காததாலும், வெயிலின் தாக்கம் மற்றும் எதிர்பார்த்த பருவமழை இல்லாததாலும் பயிர்கள் கருகின. கர்நாடகா அரசு மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்கி இருந்தால் சாகுபடிக்கு தேவையான நீர் ஓரளவு கிடைத்திருக்கும். தற்போது குறுவை சாகுபடி முடிந்த நிலையில், சம்பா, தாளடி சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சம்பா, தாளடி சாகுபடிக்கு ஜனவரி 28-ம் தேதி வரை 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து 108.50 டிஎம்சி நீர், மீதமுள்ள 97.10 டிஎம்சி நீர் மழை மற்றும் நிலத்தடி நீரின் மூலம் பெறப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் 13 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல, மேட்டூர் அணையின் நீரை கொண்டு 150-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீர் இருப்பும் குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக நீடிக்கிறது. தற்போது அணையில் உள்ள 13 டிஎம்சி நீர் இருப்பையும், நீர்வரத்தையும் கொண்டு 4 அல்லது 5 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்கினால், விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x