Last Updated : 08 Apr, 2014 10:58 AM

 

Published : 08 Apr 2014 10:58 AM
Last Updated : 08 Apr 2014 10:58 AM

சதர்ன் ஸ்டெரக்சுரல்ஸ் நிறுவனம் மீண்டும் திறக்கப்படுமா? - திருவள்ளூர் வரும் முதல்வர் அறிவிப்பை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள்

பட்டாபிராமில் கடந்த 13 ஆண்டு களாக மூடப்பட்டுள்ள ‘சதர்ன் ஸ்டெரக்சுரல்ஸ்’ தொழிற் சாலையை தமிழக அரசு மனது வைத்தால் திறக்கலாம் என்பதால் இன்று (8-ம் தேதி) தேர்தல் பிரச்சாரத் துக்கு திருவள்ளூர் மாவட்டம் வரும் முதல்வர் ஜெயலலிதா அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வேலையிழந்த 1,300 தொழிலாளர்கள் வலியுறுத்து கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகே ‘சதர்ன் ஸ்டெரக்சுரல்ஸ்’ நிறுவனம் உள்ளது. 1956-ம் ஆண்டு ‘வேகன் பேக்டரி’ என்ற பெயரில் தனியார் மூலம், 45 ஏக்கர் பரப்பளவில் 30 லட்சம் ரூபாய் முதலீட்டில் இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு ஆரம்பத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் பளு தூக்கும் கிரேன்கள், சுரங்கங்களில் பயன்படும் மணல் வாரும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 1971-ம் ஆண்டு இந்நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. தென்மாநிலத்தில் அரசு நிர்வகிக்கும் மிகப் பெரிய கனரக தொழிற்சாலையாக திகழ்ந் தது. இதில் 1,300 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், நிர்வாக சீர்கேடு, உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2000-ம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டது. அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு அரசு விருப்ப ஓய்வு கொடுத்தது.

இதனிடையே நிறுவனம் ஏன் மூடப்பட்டது, மீண்டும் திறக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பட்டாபிராம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் மனு அளித்திருந்தார்.

இதற்காக வந்த பதிலில் ‘தில்லியில் உள்ள தொழில் மற்றும் நிதி சீரமைப்பு துறை மீண்டும் இத்தொழிற்சாலையை திறப்பதற்கான அறிவிப்பை இதுவரை வழங்கவில்லை. நிறுவன பராமரிப்புக்காக மாதம் ரூ.1.20 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆலையை மீண்டும் திறப்பது குறித்து, தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சடகோபன் ‘தி இந்து-விடம் கூறும்போது, ‘‘தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டால், ஆயிரக்கணக் கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 13 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை பராமரிக் கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்க ளுக்கு ரூ.1.20 லட்சம் செலவழிக்கப் பட்டு வருகிறது.

இதற்குப் பதிலாக இதே தொகையில் நிறுவனத்தை மீண்டும் திறந்து, உற்பத்தியை தொடங்கியிருந்தால் அரசுக்கு லாபம் கிடைத்திருக்கும்” என சடகோபன் கூறினார்.

இந்நிலையில் இன்று திருவள்ளூருக்கு பிரச்சாரத்துக்கு வரும் முதல்வர் ஜெயலலிதா, ஆலையை மீண்டும் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது வேலை இழந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x