Published : 15 Sep 2023 04:46 PM
Last Updated : 15 Sep 2023 04:46 PM

“அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பித்த அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்” - அதிமுக

டி.ஜெயக்குமார் | கோப்புப் படம்

சென்னை: மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், “மறைந்த தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை கைவிட வேண்டும். அவர் ஏற்கெனவே ஜெயலலிதா குறித்துப் பேசியதற்காக கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து அதற்காக மன்னிப்பு கேட்டார். பின்பு தான் அவ்வாறு பேசவில்லை என விளக்கம் அளித்தார். தற்போது அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அண்ணாமலை பேசி இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இன்று இல்லை என்றாலும் உலகத் தமிழர்களால் போற்றப்படும் தலைவர் அவர். அவரைக் கொச்சைப்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசி இருக்கிறார். அண்ணாமலை கூறியதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. முத்துராமலிங்கத் தேவரும் அண்ணாதுரையும் நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்ல, முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூறும் விதமாக எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முத்துராமலிங்கத் தேவர் மீது மிகப் பெரிய மதிப்பு கொண்ட கட்சி அதிமுக. அண்ணாதுரை மதிப்பு மிக்கவர்.

அண்ணாமலை எந்தப் புத்தகத்தில் படித்தார், எங்கு படித்தார் என தெரியவில்லை. திடீரென வந்து அண்ணாதுரையை தவறாகப் பேசினால் அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அண்ணாமலையின் பேச்சுக்காக நாங்கள் எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். அண்ணாமலை தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். மீண்டும் இப்படிப் பேசினால், அண்ணாமலைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

அண்ணாமலை என்ன பேசினார்? - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றுப் பேசியபோது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது அவர், “1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் 10 நாட்கள் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டின் 4-ம் நாளன்று, அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்து பேசிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, பார்வதி தேவியைப் பற்றி விமர்சித்திருந்தார்.

மறுநாள் மேடைக்கு வந்த முத்துராமலிங்கத் தேவர், 'சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்து உமயவளை தப்பாக பேசியது யார் என கேள்வி எழுப்பினார். எல்லோரும் நெளிகிறார்கள். அண்ணாதுரையை மதுரையில் ஒளித்துவைத்திருக்கிறார்கள். அவரால் வெளியே செல்ல முடியவில்லை. முத்துராமலிங்கத் தேவர் உக்கிரமாகப் பேசினார். கடவுளை நம்ப மறுப்பவர்கள், நம்புபவர்களைப் பற்றிப் பேசக்கூடாது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை அவ்வாறு பேசினால், அம்மனுக்கு ரத்தத்தில் அபிஷேகம் நடக்கும் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தவர் அண்ணாதுரை" என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x