Published : 15 Sep 2023 06:02 AM
Last Updated : 15 Sep 2023 06:02 AM

ரயில்களில் பொங்கல் பண்டிகை முன்பதிவு - 2 நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், பாண்டியன், பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்களின் முன்பதிவு 2 நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகி, 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஜனவரி 11-ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

தூங்கும் வசதி பெட்டிகள்: இந்நிலையில், ஜனவரி 12-ம் தேதி-க்கான டிக்கெட் முன்பதிவு நேற்று நடைபெற்றது. டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், காலை 8.02-க்கு முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

சென்னையில் இருந்து ஜன.12- ம்தேதி மாலை அல்லது இரவில் தென் மாவட்டங்களுக்குப் புறப்படும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, முத்துநகர், பாண்டியன் உள்ளிட்ட ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டிகளில் அடுத்தடுத்து டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது. அதன் பிறகு ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு படிப்படியாக நடைபெற்றது.

நேற்று மதியம் நிலவரப்படி, நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர் ஆகிய ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 334 பேரும், கோவைக்குச் செல்லும் சேரன் ரயிலில் 294 பேரும், நீலகிரி ரயிலில் 180 பேரும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர்.

இதேபோல, சென்னையில் இருந்து பகல் நேரத்தில் இயக்கப்படும் வைகை, பல்லவன் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை வந்தது.

ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று நடைபெற்றது. டிக்கெட் முன்பதிவு மையங்களில் ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டதால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும், பண்டிகைக் காலத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆலோசனை நடத்தப்படும்: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்ட விரைவு ரயில்களின் தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. அதிகமாக காத்திருப்பு பட்டியல் உள்ள வழித்தடங்களைத் தேர்வு செய்து, சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி, பின்னர் அறிவிக்கப்படும்.

ஜன. 13-ம் தேதி பயணிக்க விரும்புவோர் வெள்ளிக்கிழமை (செப். 15) ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x