Published : 21 Dec 2017 11:17 AM
Last Updated : 21 Dec 2017 11:17 AM

சுடுவதில் சுட்டி.. படிப்பில் கெட்டி! - வெற்றிகளை குவிக்கும் கவி ரக்ஷனா

க மாணவர்கள் எல்லாம் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொச்சியில் நடைபெற்ற தென் மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று வந்திருக்கிறார் மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த கவி ரக்ஷனா.

அண்மையில் ஜப்பானில் வாக்கோ சிட்டியில் பத்தாவது ஆசிய ஏர்கன் ஷூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் தட்டி வந்தார் கவி ரக்ஷனா. இந்தப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தென் இந்தியாவிலிருந்து சென்றிருந்த ஒரே நபர் இவர் மட்டுமே. இந்தியாவிலிருந்து சென்றிருந்த 15 பேரில் தனிப் பயிற்சியாளர் இல்லாமல் சென்றவரும் இவர் ஒருவர்தான்!

kavi_3.JPG கவி ரக் ஷனா நூலிழையில் தவறிய தங்கம்

பயிற்சியாளர்கள் இல்லாத போதும் தனது விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் மேற்கு வங்கத்தின் மெகுலிகோஸ், மத்திய பிரதேசத்தின் ஸ்ரேயா அகர்வால் ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று வந்திருக்கிறார் கவி ரக்ஷனா. இந்தப் போட்டிகளில் நூலிழையில் சீன வீரர்களிடம் தவறவிட்ட தங்கத்தை 2020-ல், ஜப்பானில் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வென்றெடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே தமது லட்சியம் என்கிறார் இந்த துப்பாக்கி மங்கை.

இதுவரை, கவி ரக் ஷனா துப்பாக்கி சுடுதலில் 35 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தென் இந்திய அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறார் கவி ரக்ஷனா. மருத்துவராக வேண்டும் என்பதை எதிர்கால கனவாக வைத்திருக்கும் இவர், படிப்பிலும் முதல் இரண்டு இடங்களைத் தக்கவைத்திருப்பது இன்னுமொரு சிறப்பு.

விளையாட்டாகச் சேர்ந்தேன்

இவரது தந்தை கே.சக்கரவர்த்தி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவ நிபுணர். அம்மா ராணி சமூக சேவகர். கொச்சிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கவி ரக்ஷனாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். “சின்ன வயசுல ஏதாவது ஒரு விளையாட்டுல சேர்ந்து சாதிக்கணும்னு நினைச்சேன். அதுக்காக, முதலில் சதுரங்கம், ஸ்கேட்டிங் என ஒவ்வொன்றாக தொட்டேன். எதிலும் பிடிப்பு ஏற்படவில்லை.

சரி, கர்நாடக சங்கீதம் படிக்கலாம்னு போனேன். அதுவும் அவ்வளவா ஒத்துவரல. அப்பத்தான் என்னோட தங்கச்சிய எங்கப்பா மதுரை ரைபிள் கிளப்புல சேர்த்துவிடப் போனார். அப்போது, அடம்பிடித்து நானும் ரைபிள் கிளப்புல சேர்ந்தேன். முதலில் விளையாட்டாத்தான் சேர்ந்தேன். ஒரே வருசத்துல கேரளாவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டிகள்ல கலந்துக்கிட்டு 2 வெள்ளி, ஒரு வெண் கலப் பதக்கத்தை வென்ற பிறகுதான் சாதிக்கலாம்கிற ஆர்வம் வந்துச்சு.

வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும்

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றால் 6 தகுதி போட்டிகள் வைத்து 15 பேரை தேர்வு செய்வார்கள். பிறகு அதிலிருந்து முதல் 3 பேரை தேர்வு செய்து சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவார்கள். அப்படித்தான் நானும் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்” என்றார் கவி ரக்ஷனா.

தொடர்ந்து பேசிய அவரது அம்மா ராணி, ‘‘ஸ்பான்சர், தனி கோச்சர் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் சாதிப்பது ரொம்பக் கஷ்டம். இவளுக்கு மதுரை சீனியர் ஷூட்டர் சொல்லிக் கொடுத்ததுதான். ஸ்பான்சர் இல்லை. இது ஒரு காஸ்ட்லி கேம். வெப்பன், டிரஸ் கிட் என நாலு லட்ச ரூபாய் இருந்தால்தான் இந்தப் போட்டியில் கலந்துக்க முடியும். பிள்ளைகள் படித்தால் மட்டும் போதும் என நினைப்பது தவறு. விளையாட்டிலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையைக் காட்ட நாம்தான் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்” என்றார்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x