Published : 14 Sep 2023 04:37 PM
Last Updated : 14 Sep 2023 04:37 PM

உங்கள் குரல் | பாலாற்றின் குறுக்கே கல்லணை போல தடுப்பணைகளை கட்ட வேண்டும்!

திருப்பத்தூர்: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை கல்லணை போல கட்ட வேண்டும் என பாலாற்று நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலம், சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் பாலாறு உற்பத்தியாகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 222 கி.மீ., பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் அருகே வங்கக்கடலில் பாலாறு கலக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 127 கி.மீ., தொலைவுக்கு பாலாறு பயணிக்கிறது.

பாலாற்று நீரை நம்பியே ஒருங் கிணைந்த வேலூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் உள்ளனர். மழைக்காலங்களில் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அவ்வாறு ஓடி வீணாகும் தண்ணீரை சேமிக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்து அங்கு விவசாயத்தை பெருக்கி வருவதை போல, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் பாலாறு பயணிக்கும் இடங்களில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 100 தடுப்பணைகள் கட்டப்படும் அது அரசின் கொள்கை முடிவாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகள் கடந்தும் அதற்கான முயற்சிகள் என்ன ஆனது என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.

இதனிடையே, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 4 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் தடுப்பணை பணிகள் நடந்து வருகின்றன.

இந்த தடுப்பணைகள் அனைத்தும் திருச்சி கல்லணையில் உள்ளதைப்போல மேலே சாலை போக்குவரத்தும், கீழே தண்ணீர் செல்கின்ற வகையில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகவும், கோரிக்கையாகவும் உள்ளது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் நீர்வளத்துறையினர் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் தடுப்பணை பணிகளை துரிதப்ப டுத்தவும், திருச்சி கல்லணை போன்ற தடுப்பணைகளை கட்ட உத்தரவிட வேண்டும். கல்லணை போல தடுப்பணைகள் கட்டினால் பொருள் செலவும் குறையும் என்பதால் முதல்வர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என்றார்.

கல்லணை போல தடுப்பணைகள் கட்டினால் பொருட்களின் செலவு குறையும் என்பதால் முதல்வர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x