Published : 31 Dec 2017 07:36 AM
Last Updated : 31 Dec 2017 07:36 AM

குடும்ப பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்துக்கு போகாதீர்கள்;பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அறிவுரை

குடும்ப பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்துக்கு போகாதீர்கள், உறவினர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், சிகரத்தில் நகரத்தார் என்ற 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டுத் தலைவர் பிஎல்ஏ.சிதம்பரம் வரவேற்றார். மாநாட்டு கவுரவத் தலைவர் எஸ்பி.வள்ளியப்பன் முன்னிலை வகித்தார்.

மாநாட்டை தொடங்கி வைத்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் பேசிய தாவது:

ஒன்றுபடுவோம், உயர்வடைவோம் என்ற மிகுந்த குறிக்கோளோடு இந்த மாநாட்டை நடத்துகிறோம். வங்கி நிர்வாகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நகரத்தார்தான் என்று ஜவஹர்லால் நேரு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காலத்தில் இருந்து மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகையைக் கொண்ட சமுதாயமாக இருந்தாலும் மிகச்சிறந்த களப்பணியாளர்களாக இருந்து வருகிறோம். தஞ்சை மாவட்டத்திலும் நிறைய கோயில்கள் கட்டியுள்ளோம்.

இந்நிலையில் தற்போது நாம் எடுக்க வேண்டியது 2 நடவடிக்கைகள். எந்த குடும்பத்திலும் பாகப்பிரிவினையை பொறுத்தவரை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகின்றனர். நீதிமன்றத்துக்கு செல்வதால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் தீர்வு கிடைப்பதில்லை. முன்சீப் கோர்ட், சப் கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என செல்ல வேண்டும். இப்படி தந்தை போட்ட வழக்கை பேரனாலோ, அவனது மகனாலோதான் தீர்க்க முடிகிறது. குடும்பத்தில் அண்ணன், தம்பிகளிடையே ஒற்றுமை இல்லை.

முன்பெல்லாம் 13 வயதுக்கு பிறகு பெண்களை படிக்க அனுப்புவதில்லை. இப்போது பெண்கள் நிறைய படிக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். சுமுகமாக வாழ்க்கை நடத்தத்தான் இறைவன் நம்மை படைத்துள்ளார். குடும்ப பிரச்சினைகளுக்காக கோர்ட்டுக்கு போகாதீர்கள். என்னிடம் வாருங்கள் நானே சரி செய்து கொடுக்கிறேன்.

நமது சமுதாயத்தில் சமீபகாலமாக கலப்புத் திருமணம் நிறைய நடக்கிறது. குடும்பத்தில் ஆண்களுக்கு உள்ளதைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை, வாரிசு உரிமை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான சட்டத்துக்கு திருத்தம் செய்து பெண்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் உடன் பிறந்த சகோதரர்களுக்கு சொத்தில் உள்ள சம உரிமை, அவர்களுக்கும் உள்ளது என சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, கணவரிடம் இருந்து மனைவி மட்டும்தான் ஜீவனாம்சம் பெற வேண்டும் என்பதில்லை. வசதியற்ற கணவர், வசதியான மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என்றார்.

மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, எழுத்தாளர் சோம.வீரப்பன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஏ.அழகப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x