காவிரி பிரச்சினை முதல் வங்கிகளுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.13, 2023

காவிரி பிரச்சினை முதல் வங்கிகளுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.13, 2023
Updated on
3 min read

பட்டாசு விற்க, வெடிக்க டெல்லி அரசு தடை - உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு: காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு விற்கவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ள அம்மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“டெல்லி அரசு எடுத்துள்ள முடிவில் நாங்கள் தலையிட மாட்டோம். பட்டாசுக்கு தடை என்றால், அது முழுமையான தடைதான். மக்களின் உடல்நிலை மிகவும் முக்கியம். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எங்கே தடை இல்லையோ அங்கே சென்று வெடிக்கலாம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையால் வடமாநில ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்த அச்சம் இல்லை: அமைச்சர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா இடையேயான எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி உட்பட்ட மாவட்டங்கள் அண்டை மாநிலங்களோடு ஒருங்கிணைந்த மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் கேரள மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்படுவதற்கான பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சோதனையின் போது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. எனவே, தமிழகத்தை பொறுத்தமட்டில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை” என்று தெரிவித்தார்.

இதனிடையே, கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டம் எப்போது?: “காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு சேமித்து வைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது: ஐகோர்ட் நீதிபதி: சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இவை அனைத்தும் தனது சொந்த கருத்து மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

உதயநிதி மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு: சனாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையின் மிரா சாலையில் வசிக்கும் நாக்நாத் காம்ப்ளி என்ற தனியார் நிறுவன ஊழியர், உதயநிதிக்கு எதிராகக் கொடுத்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட வழக்குகள் தீர்ப்புக்காக ஒத்திவைப்பு:தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை, கோவையில் உள்ள அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. சத்தியநாராயணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சோதனை நடைபெற்றது. இதனிடையே, சத்தியநாராயணன் வீடு அமைந்துள்ள பகுதியில் அதிமுக தொண்டர்கள் திரண்டனதால் பரபரப்பு நிலவியது.

செப்.17-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு:நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக, இம்மாதம் 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், சிறப்புக் கூட்டத்துக்கான நோக்கம் குறித்த அரசின் மவுனத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு: அசையும் அல்லது அசையா சொத்துகளின் பேரில் கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அவர்களது அசல் ஆவணங்களை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

லிபியாவில் புயல், மழையால் கடுமையான பாதிப்பு: லிபியாவைத் தாக்கிய டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக அங்கு வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்நதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதுகுறித்து "புயல், கனமழை மற்றும் அணைகள் உடைப்பால் இதுவரை 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை" என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in