Published : 13 Sep 2023 03:44 PM
Last Updated : 13 Sep 2023 03:44 PM

காவரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இப்போது அவசியம் இல்லை: துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

சென்னை: "காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீரை, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று ஒரு முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து கா்நாடக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே, கர்நாடக அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

கர்நாடக அரசு தமிழக அரசுக்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை விட, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு என்ன பதில் சொல்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். அவர்களது பதிலை பார்த்த பின்னர், எங்களுக்கு இருக்கும் கடைசி முடிவு, உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான். உச்ச நீதிமன்றத்தில், வரும் 21ம் தேதி காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாக, கர்நாடக அரசின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும். அந்த முடிவையும் வழக்கில் இணைத்து தமிழக அரசு சார்பில் வாதிடப்படும்" என்றார்.

அப்போது இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. அதற்காக கூட்டக் கூடாது என்பதல்ல. வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, வேண்டும் என்றால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். எனவே, அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை" என்றார்.

கர்நாடக அணைகளில் பேதுமான தண்ணீர் இல்லை, மழைப்பொழிவு இல்லை என்று கூறப்படுகிறது. மத்திய அரசுடன் இணைந்து தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக கோரிக்கை வைக்கப்படும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றமே ஒரு குழுவை நியமித்து, கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு ஆணையிடலாம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு சேமித்து வைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக அணைகளில் போதியஅளவுக்கு நீர் இல்லை. இதுவரை இருப்பில் இருந்த நீரைதமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். எஞ்சியுள்ள நீரைக் கொண்டே கர்நாடக‌ விவசாயிகளின் பாசன தேவை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களின் குடிநீர் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். கர்நாடக அரசை பொறுஇத்தவரை குடிநீருக்கே முதல் முன்னுரிமை. தற்போதைய நீர் இருப்பு குடிநீர் பயன்பாட்டுக்கு போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீரைதிறந்துவிட முடியாது. இதை காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்போம் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x