Published : 13 Sep 2023 06:46 AM
Last Updated : 13 Sep 2023 06:46 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.
கடந்த 2018-ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் உயிரிழந்தனர். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு கொச்சியிலும் கடந்த 2021-ம் ஆண்டில் கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த சூழலில் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகடந்த ஆக. 30-ல் உயிரிழந்தார்.அதே மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் மற்றொரு நோயாளிஉயிரிழந்தனர். அவர்களின் மாதிரிகள் மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் இருவரும் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, “கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்துக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு குழு அனுப்பப்பட்டு உள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவ நிபுணர்கள், மாநில அரசுக்குதேவையான அறிவுரைகளை வழங்குவர்" என்று தெரிவித்தார்.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கோழிக்கோடு பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, "நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. தனி வார்டுகளில் அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. கோழிக்கோடு பகுதியில் சுமார் 75 பேரை தனிமைப்படுத்தி உள்ளோம். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. காய்ச்சல் பாதிப்புள்ள 4 பேரின் மாதிரிகளை புனே ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அவற்றின் முடிவுக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில், “கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்திருப்பதை மிக தீவிர பிரச்சினையாக கையாளுகிறோம். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’’ என பதிவிட்டுள்ளார்.
மருத்துவர்கள் கூறும்போது, ‘‘நிபா வைரஸுக்கு இதுவரைமருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல்14 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும். கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்படும், சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT