Last Updated : 13 Sep, 2023 03:24 PM

 

Published : 13 Sep 2023 03:24 PM
Last Updated : 13 Sep 2023 03:24 PM

நங்கநல்லூர் நூறு அடி சாலையில் நாய்கள் ரொம்ப ‘பிஸி’ - கூட்டம் கூட்டமாக துரத்துவதால் மக்கள் அச்சம்

சென்னை: நங்கநல்லூர் 100 அடி சாலையில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். அவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலத்தில் நங்கநல்லூர் மிகவும் முக்கியமான பகுதியாகும். இங்குள்ள நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவற்றில் பெரும் பாலானோர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களாக இருக்கின்றனர்.

இதுதவிர நங்கநல்லூரைச் சுற்றிலும் ஏராளமான கோயில்கள் இருப்பதால் இது சென்னையின் ‘சின்ன காஞ்சிபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அதில் பிரபலமான ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ ஐயப்பன் கோயில்,  தேவி கருமாரி அம்மன் கோயில் உள்ளிட்டவை உள்ளன. மேலும், அதிகமான மக்கள் வசித்து வருவதால் எப்போதும் பரபரப்பான பகுதியாகவே நங்கநல்லூர் உள்ளது.

இந்நிலையில் நங்கநல்லூரில் அமைந்துள்ள 100 அடி சாலையை சுற்றியுள்ள தெருக்களில் சமீபகாலமாக நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரியும் நாய்கள் அந்த வழியாக செல்வோரையும் துரத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளன. நாயிடம் இருந்து தப்பிக்க இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இடறி கீழே விழுந்து காயமடைவதும் நிகழ்கிறது.

நங்கநல்லூர் 100 அடி சாலையை ஆக்கிரமித்துள்ள நாய்கள்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்

இதன்காரணமாக அந்த சாலையில் நடக்கவே மிகவும் அச்சமாக இருப்பதாக கூறும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த கதிரவன், நடேசன் ஆகியோர் கூறியதாவது: தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது என பல்வேறு சூழல்களில் சாலையில் செல்லும்போதெல்லாம் நாய்கள் துரத்துவதால் அச்சத்துடனே இந்த சாலையை கடக்க வேண்டியுள்ளது.

இந்த பகுதியில்தான் மாநகராட்சியின் துப்பரவு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கிருந்தே துப்பரவு பணிக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. துப்பரவு பணியில் ஈடுபடுபவர்கள் வீணான உணவுகளை தெருநாய்களுக்கு வழங்குவதால் அவை தொடர்ந்து இந்தப் பகுதியிலேயே தங்கிவிடுகின்றன.

மாநகராட்சி நடவடிக்கை தேவை இதுதவிர கார்களில் செல்லும்போது நாய்கள் திடீரென குறுக்கே வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் சாலையின் மையத்தில் படுத்து கொள்வதால் வாகனத்தில் செல்பவர் விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. சாலையில் செல்பவர்களை துரத்துவது, உணவுக்காக அந்த நாய்களுக்கு இடையேயான சண்டைகளும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மொத்தத்தில் நாய்கள் அதிகரிப்பால் அந்தப்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆலந்தூர் மண்டலக் குழுத் தலைவர் என்.சந்திரனிடம் கேட்டபோது, ‘‘சென்னை மாநகராட்சியில் சோழிங்கநல்லூர், நங்கநல்லூர் உட்பட சில பகுதிகளில்தான் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் உள்ளன.

அதனால் தொந்தரவுகள் உள்ள பகுதிகள், மக்கள் புகார் கூறும் இடங்களில் சுற்றிதிரியும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இந்த மண்டலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 100 அடி சாலையில் தெருநாய்கள் சொற்ப அளவில்தான் உள்ளன. அவற்றால் தொல்லை இருப்பதாக எவ்வித புகார்களும் கிடைக்க பெறவில்லை. தற்போதைய தகவலின் அடிப்படையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x