Published : 24 Dec 2017 09:04 PM
Last Updated : 24 Dec 2017 09:04 PM

திமுகவினர் தங்களை சுய பரிசோதனை செய்யாமல் பாஜகவை குறை சொல்வதா?- தமிழிசை காட்டம்

திமுகவும் அதன் கூட்டணி தலைவர்களும் தாங்கள் வைப்புத் தொகையை கூட மீட்டெடுக்காமல் போனது ஏன் என தங்களை சுய பரிசோதனை செய்யாமல் இதிலும் பாஜகவை குறை சொல்வதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் முடிவுகளால் எல்ல கட்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது அதை விட மேலாய் தமிழகமே மாபெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது, பணம் இருந்தால் தேர்தல் வெற்றியையும், பதவியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்பது மறுபடியும் தமிழக அரசியலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.கே நகர் விற்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தினகரன் ஆர்.கே நகரில் சுயேச்சையாக நிற்கப்போகிறார் என்ற உடனேயே அந்த தொகுதியை விலை பேசி வாங்கப் போகிறார் என்ற நிலைதான் ஆரம்பத்திலே உருவானது. எனவேதான் முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக சாலை மறியலில் ஈடுபட்டது, தேர்தல் ஆணையம் முற்றிலுமாக செயலிழந்து நிற்கிறது, பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாமல் தவிக்கிறது. இந்த தேர்தல் வெற்றி ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சவால் மட்டுமல்ல ஆபத்து என்றே சொல்லலாம் இது பாஜகவுக்கு மட்டுமல்ல அத்தனை கட்சிகளுமே பின்னடைவு. ஏனென்றால் அனைவரும் சமதளத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என்பதற்காகதான் தேர்தல் செலவு உச்ச வரம்பே இருக்கிறது. ஆனால், இங்கே அந்த வரம்பை மீறி செலவு செய்து பெற்ற வெற்றி என்பது நிதர்சனம்.

ஆர்.கே நகரில் வாக்களித்த பெண்கள் ஒன்றை நினைத்து பார்த்திருக்க வேண்டும். அங்கே தினகரன் பெற்ற வெற்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை செல்ல காரணமாக இருந்த சசிகலாவின் வெற்றியே. அவரது இறுதி நாட்களில் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு ஜெ.வின் நிழல் படத்தை சிகிச்சை பெறும்போது அவருக்கே தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டு ஓர் ஆண்டு கழித்து ஓட்டுக்காக வெளியிட்டது சசிகலாவின் நம்பிக்கை துரோகத்தின் வெளிப்பாடு என்பதை ஆர்.கே நகர் தாய்க்குலங்கள் உணரவில்லை என்பதே வேதனை.

கடந்த 30 ஆண்டுகளாக யாருடைய கட்டுப்பாட்டில் ஜெ.வும் அதிமுகவும் தமிழகமும் இயங்கியதோ அதே குடும்பத்தின் பிடியில் மீண்டும் சிக்கி இருப்பதை ஆர்.கே நகர் மக்கள் எப்படி ஒப்புக்கொண்டார்கள்? எனவே தார்மிக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஆர்.கே நகர் தோற்றுவிட்டதே என்ற ஆதங்கம் எனக்கு. இந்த தேர்தலில் தினகரன் வெற்றியும் நடந்த நடைமுறைகளும் தமிழகத்தில் உள்ள அத்தனை தலைவர்களுமே கவலையோடு உற்றுநோக்கி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது, இதனை சமூக அக்கறையோடு ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் அணுகவேண்டிய நேரம் இது என்பதே என் கருத்து.

திமுகவும் அதன் கூட்டணி தலைவர்களும் தாங்கள் ஏன் வைப்புத் தொகையை கூட மீட்டெடுக்காமல் போனது ஏன் என தங்களை சுய பரிசோதனை செய்யாமல் இதிலும் பாஜகவை குறை சொல்வதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. பாஜக ஜனநாய கடமையாற்ற களத்தில் இருக்க வேண்டும் என்றே தேர்தலில் போட்டி போட்டோம் ஆனால் களங்கப்படாமல் களப் பணியாற்றினோம். அப்போது தான் பிற கட்சிகளால் களங்கப்பட்ட களத்தையும் எங்களால் உணர முடிந்தது. ஆக பாஜகவைப் பொறுத்தவரையில் நாங்கள் மீண்டெழுந்து வெற்றி பெறுவோம். தற்போது நடந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் 3 தொகுதியில் பாஜக அமோக வெற்றி பெற்றதைப் போல் வருங்காலத்தில் தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உண்டு. அந்தக் காலம் தான் தமிழகத்தின் பொற்காலமாக அமையும் என்பது உறுதி.

இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆளும் பாஜக தமிழகத்தில் ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதன் மூலம் மற்ற மாநில மக்கள் பெரும் நன்மைகளையும், வளர்ச்சிகளையும் ஊழல் இல்லா நிர்வாகத்தையும் தமிழகமும் பெரும் வாய்ப்பு விரைவில் கைகூடும் என்று நம்பிக்கையோடு நங்கள் உழைப்போம்.

காசு, பணத்தால் களங்கப்பட்டு இருந்து தேர்தல் களத்தில் கலங்காமல் களப் பணியாற்றிய பாஜக தொடர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி.

நோட்டாவை தேடும் தலைமுறைக்கு ஓர் அன்பான வேண்டுகோள். உங்கள் தொகுதியில் உங்கள் ஓட்டிற்காக பல கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களுக்குள் நேர்மையான, திறமையான சேவை செய்யும் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நோட்டாவுக்கு போடுவதால் நல்ல வேட்பாளர்கள் கூட புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது இத்தனையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

வருங்காலத்தில் மக்கள் மனநிலை மாறும் என நம்புகிறோம், நாளை நமதே. நல்லதே நடக்கும் காத்திருப்போம்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x