Last Updated : 17 Jul, 2014 09:10 AM

 

Published : 17 Jul 2014 09:10 AM
Last Updated : 17 Jul 2014 09:10 AM

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து தவறி நடந்ததல்ல, அலட்சியத்தால் நடந்தது...

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் நினைவுகளை அரசும் பொதுச் சமூகமும் மறக்க முனைந்து வரும் வேளையில், 10 ஆண்டுகளானாலும் பசுமரத்து ஆணிபோல பதிந்துள்ள அந்த நினைவுகளே நீதிக்கான, சமூகத்துக்கான போராட்டத்துக்கு துணை நிற்பதாகத் தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்டோர்.

‘கலெக்டராகி எல்லாருக்கும் உதவனும்’

“நான் அப்ப அஞ்சாவது படிச்சேன். தங்கை சுஷ்மிதா மூனாவதும், தம்பி கைலாஷ் இரண்டாவதும் படிச்சாங்க. மூனுபேரும் ஒன்னாதான் பள்ளிக்கு வந்தோம். நான், பின்பக்கம் இருந்த கூரை கொட்டாய் கிளாஸ்ல இருந்தேன். பக்கத்துலேயே சத்துணவு சமையலறை. அதுவும் கூரை கொட்டாய்தான். இங்கிலீஷ் மீடியம் படிச்ச தம்பி, தங்கைங்களோட ஷூ, சாக்ஸ், டையை கழட்டி வைக்க சொல்லிட்டு, சத்துணவுக்கு கணக்கு காட்றதுக்காக தமிழ் மீடியத்துல கொண்டு போய் உட்கார வச்சாங்க.

பத்தர மணி இருக்கும், ஒரு டீச்சர் ஓடிவந்து கூரை தீப்புடிச்சிருச்சி மாடிக்கு ஓடுங்கன்னு சொன்னாங்க. அது குறுகலான படி. இடிச்சிகிட்டு தள்ளிகிட்டு ஏறினோம். ஆனா, அங்கயும் தீ பிடிச்சதால கேட்டை இழுத்து பூட்டிட்டாங்க. கீழேயும் எறங்க முடியாம தவிச்சோம். அப்புறம் தப்பிச்சி வெளியே வந்து, முதல்ல, என் தம்பியதான் தேடுனேன். ஒரு வழியா கண்டு பிடிச்சேன். ஆனா, தங்கச்சிய காணோம். பின்னர், கரிக்கட்டையா இருந்ததால, நாங்க சின்ன புள்ளைங்களா இருந்ததால எங்களுக்கு காட்டாமலே கொண்டு போய் எரிச்சிட்டாங்க. ஒரு அண்ணனுக்கு தம்பி எப்படி முக்கியமோ, அப்படித்தான் ஒரு அக்காவுக்கு தங்கை. அது அப்ப எனக்குப் புரியல. வளர வளரத்தான் தங்கையோட தேவை புரியுது. வெளியே போகனும்னாகூட பக்கத்து வீட்டுல யாரு இருக்கா, யார கூப்பிடலாம்னு யோசிக்க வேண்டியிருக்கு. இதுவே, என் தங்கச்சி இருந்திருந்தா நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து போயிடுவோம். அவளை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்கு.

இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு நாளா அறிவிக்கனும், உள்ளூர் விடுமுறை விடுனும்னு கேட்கிறோம். ஆனா, யாரும் கண்டுகொள்ளவில்லை. நீங்களே பாருங்கள் எத்தனை குழந்தைகள் அஞ்சலி செலுத்த முடியாமல் நின்னு பாத்துட்டு மட்டுமே போறாங்கன்னு. ஸ்கூல்ல கேட்டால் அனுமதி தரமாட்டேன்னு சொல்றாங்க. லீவு போட்டுட்டு இங்கு வந்தால், அடுத்த நாள் அதற்கான தண்டனைய வாங்கிக்கனும். நான் கூட இன்னக்கி லீவ் போட்டுட்டுதான் வந்திருக்கேன். நாங்க தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்ட அளவுல லீவு கேக்கல. கும்பகோணத்துக்குதான் கேட்கிறோம். இந்த ஒரு நாள் லீவு விடுறதால என்ன ஆகப்போகுது. இதுக்காக நிதி ஒதுக்கி, தனி பட்ஜெட்டா தாக்கல் செய்யப் போறாங்க. பத்து வருசமா கேட்கிறோம். கண்டு கொள்ளவே இல்லை.

இதுபோலத்தான் இந்த விபத்தும். இது முழுக்க முழுக்க அஜாக்கிரதையாலதான் நடந்துச்சி. அன்னைக்கி டீச்சருங்க உள்ள இருந்திருந்தா இந்த விபத்தே நடந்திருக்காது. அவங்க யாருக்கும் சிறு கீறல் கூட இல்ல. இதனால, இத ஒரு ஆக்சிடென்டுனு சொல்லி கேஸ மூட முடியாது. பத்து வருசமா நடக்குது. இப்ப வரை முடிக்கல. தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் நீதிமன்றத்துக்கு அலஞ்சிக்கிட்டு இருக்கோம். ஒவ்வொரு சம்மன் வரும்போதும், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடக் கூடாது விடக் கூடாதுனு வைராக்கியமா இருந்தோம். இப்ப சாட்சிங்க எல்லாரையும் விசாரிச்சிட்டாங்க. ஆனா இன்னும் தீர்ப்பு வரல. கேட்டா, நீதிபதிய மாத்திட்டாங்கன்னு சொல்றாங்க. எத்தனையோ வழக்குகளை சீக்கிரமா முடிக்கிறவங்க இதல மட்டும் ஏன் தாமதம் செய்றாங்க. விரைவு நீதிமன்றம் அமைச்சி இதை சீக்கிரமே முடிச்சிருக்கலாம். ரெண்டு ஆட்சி மாற்றம் நடந்திருச்சி. ஆனா, எந்த பிரயோஜனமும் இல்ல. காரணமானவங்களுக்கு எப்ப தண்டனை கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருக்கோம்.

அப்ப ஜனாதிபதியா இருந்த அப்துல்கலாம் சார், வந்தப்ப, நாங்க உள்ளூர் லீவு விடனும், கேஸை சீக்கிரம் முடிக்கனும்னு ரெண்டு கோரிக்கை வைச்சோம். அவசியம் செய்யிறோம்னு சொன்னாங்க. அப்ப, அவங்கதான் சொன்னாங்க, இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு நாளா அறிவிக்கலாம்னு. இதுக்குமேல யாரு அறிவிக்கனும்னு நெனைக்கிறாங்கனு தெரியல?” என்கிறார் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. பி.எட். ஒருங்கிணைந்த பட்டம் படிக்கும் 3-ம் ஆண்டு மாணவி எம்.மதுமிதா.

தம்பி இருந்திருந்தா நல்லாயிருக்கும்...

“அப்ப நான் அஞ்சாவது படிச்சேன். தம்பி லட்சுமணன் 3-வது படிச்சான். தம்பிக்கு அன்னக்கி ஜுரம். அப்பா, டாக்டருகிட்ட காட்டிட்டு, அவரோட ஆட்டோவுல காலையில 10 மணிக்குதான் ஸ்கூலுக்கு வந்தோம். லேட்டா வந்ததால தம்பிக்கிட்ட மத்தியானம் வந்து பாக்கிறேன்னு சொல்லிட்டு முதல் மாடிக்கு போயிட்டேன். கொஞ்ச நேரத்துல தீ புடிச்சதா சொன்னாங்க. நான் மாடியில இருந்து ஓடி வந்தேன். படி குறுகலா இருந்ததால பலர் அடிபட்டாங்க. தம்பி தப்பிச்சிருப்பான்னு நெனைச்சிகிட்டு வெளியே ஓடி வந்துட்டேன். ஆனா, அவன் நெருப்புல மாட்டிகிட்டது 3 மணிக்குதான் தெரிஞ்சிச்சு. கரிக்கட்டையா இருந்ததால காட்டாமலே எரிச்சிட்டாங்க. தம்பி இருந்தா நல்லா இருந்திருக்கும்” எனக் கூறும்போதே குபீரென பெருக்கெடுத்தோடும் கண்ணீரை துடைத்துக் கொள்கிறார் கும்பகோணம் கல்லூரியில் பி.காம். முதலாண்டு படிக்கும் எஸ்.மகாலட்சுமி.

‘கலெக்டராகி எல்லாருக்கும் உதவனும்’

“நான் அப்போ தமிழ் மீடியத்துல 3-வது படிச்சேன். கீழேதான் இருந்தேன். சத்துணவுக்கு கணக்கு காட்டுறதுக்காக மாடியில உட்கார வச்சாங்க. திடீர்னு கூரையில தீ புடிச்சி எரிஞ்சிச்சு. எல்லா குழந்தைங்களும் கதறுனோம். நான், ஓடி அங்க இருந்த பெஞ்சிக்கு கீழ ஒளிஞ்சிகிட்டேன். அப்ப, பக்கத்து வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டு இருந்த கொத்தனார் சுவர உடைச்சிக்கிட்டு வந்து தூக்கினார். அப்புறம் என்ன நடந்ததுனு எனக்கு தெரியாது. சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. வலது கை எரிஞ்சி போனதால 2 வருஷம் ஸ்கூலுக்கு போகல. அப்புறம் இடது கையில எழுத பிராக்டிஸ் செஞ்சேன். இப்ப, பாணாதுரை மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் -1 படிக்கிறேன். ஆரம்பத்துல புள்ளைங்க கேலி பண்ணுவாங்க. இப்ப குறைஞ்சிருச்சி. வெளியில மத்தவங்க என்ன ஒரு மாதிரி பாப்பாங்க. எனக்கு சங்கடமா இருக்கும் என்ற கவுசல்யாவிடம் என்ன ஆவதாகத் திட்டம் என்றபோது, கலெக்டராவேன். அப்போதுதான் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும்” என்கிறார் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அ.கவுசல்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x