

மணல் முறைகேடு: தமிழகத்தில் 25+ இடங்களில் அமலாக்கத் துறை சோதனை: மணல் அகழ்வு முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
ஆன்லைனில் மணல் வாங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் மணல் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொள்வதாகத் தகவல் வெளியானது. பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சனாதன தர்மம்: மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு: ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "நமது முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்த சனாதன தர்மத்தை, சிலர் ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும்; கண்கள் தோண்டப்படும். சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசிவிட்டு இனி ஒருவரும் இந்த நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, “இண்டியா கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடந்து முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அன்பு என்ற பெயரில் இண்டியா கூட்டணி வெறுப்பை விற்கிறது” என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாடியுள்ளார்.
‘எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை’: பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமையல் செய்ததால் சர்ச்சையான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்தனர்.
அப்போது பள்ளியில் குழந்தைகளிடம் படிப்பு, காலை உணவு உள்ளிட்டவை குறித்து கனிமொழி எம்.பி., கேட்டறிந்தார். தொடர்ந்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். பின்னர் ஊர் கமிட்டி தலைவர் முத்துவேல்சாமி மற்றும் கிராம மக்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். அப்போது "எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை. இங்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் தான் உள்ளோம். எங்களுக்குள் எந்தவித பாகுபாடும் கிடையாது" என்று உறுதி அளித்தனர். மேலும், "இங்கு நடந்தது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினை தான். இதில் சாதிப் பிரச்சினை என்றும் எதுவும் இல்லை" என்று மக்கள் உறுதி அளித்தனர்.
இதனிடையே “உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜி20 மாநாடு பட்ஜெட் - காங்கிரஸ் சரமாரி கேள்வி: அண்மையில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டுக்கான பட்ஜெட், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநாடு முடிவுற்றதால் பிரதமர் மோடி இனியாவது தேசத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"ஜி20 உச்சி மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 990 கோடி ரூபாய். ஆனால் பாஜக அரசு அந்த மாநாட்டுக்காக ரூ.4,100 கோடி செலவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் உலக நாடுகளின் அரசுகள் பொது நிகழ்வுகளுக்கான செலவினங்களைக் குறைத்து வருகிறது.
அரசால் உள்நாட்டில் சலுகை விலையில் எரிபொருள் தர இயலவில்லை; விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையைத் தர முடியவில்லை. ஆனால் மாநாட்டுக்கு இவ்வளவு தொகை செலவழிக்கிறது. நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சிக்கலை மறைக்க பாஜக அரசு எத்தனை பூச்சு முயற்சிகளை மேற்கொண்டாலும் முடியாது. பல கோடி ரூபாய் இரைத்துக் கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் வெள்ள நீரில் புகுந்தது பொதுமக்கள் பணம் எப்படி சாக்கடைக்கு வார்க்கப்பட்டது என்பதை சொல்லும்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் "பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் பாஜக சார்பில் நடந்த இந்து சமய அறநிலையத் துறை முற்றுகைப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதால், ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நடந்தத இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால் எழுந்த புகாரின் காரணமாக, துணை ஆணையர் தீபா சத்யனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி விவகாரத்தில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செப்.16 முதல் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்: "மெட்ராஸ் ஐ நோய் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இம்மாதம் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலான பத்து நாட்களுக்கு சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“எங்களுக்கு சமத்துவத்தைப் பேசவும் உரிமை உள்ளது” - சேகர்பாபு: "திமுகவின் கொள்கையே சமத்துவம். எனவே, சனாதனம் ஒரு பக்கம் என்றால், சமத்துவம் ஒரு பக்கம். எனவே, ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் குறித்து பேசுவதற்கான உரிமை உண்டு. எனவே, திமுக தொடர்ந்து சமத்துவம் குறித்து பேசும்" என்று பாஜகவுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
காவிரி நீர் திறப்பு நிறுத்தம்: காவிரி நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் தரும் நிலையில் கர்நாடகா இல்லை என்று அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மணிப்பூரில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
‘டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி இல்லை’: டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கும் பரிந்துரை எதுவும் மத்திய அரசுக்கு வழங்கப்படவில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். முன்னதாக, காற்று மாசினைக் குறைக்கும் வகையில் டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுத இருப்பதாக தகவல் வெளியானது.