

சென்னை: சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், "பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, திருநெல்வேலி கிழக்கு சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்ற பின்னணி என்ன? சென்னையில் பாஜக சார்பில் நடந்த இந்து சமய அறநிலையத்துறை முற்றுகைப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதால், ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நடந்தத இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால் எழுந்த புகாரின் காரணமாக, துணை ஆணையர் தீபா சத்யனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.