டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப்படம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கும் பரிந்துரை எதுவும் மத்திய அரசுக்கு வழங்கப்படவில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். முன்னதாக, காற்று மாசினைக் குறைக்கும் வகையில் டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுத இருப்பதாக தகவல் வெளியானது.

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "டீசல் வாகன விற்பனைக்கு 10 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து தெளிவுபடுத்துவது அவசியமாகும். தற்போது அது போன்ற எந்தப் பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை.

வரும் 2070-க்குள் பூஜ்ஜியம் கார்பன் என்ற நிலையை எட்டுவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான பொருள்களால் ஏற்படும் காற்று மாசுவைக் குறைக்க நாம் ஏற்றுக்கொண்டுள்ள உறுதிமொழிக் கிணங்க, உயர்ந்து வரும் ஆட்டோ மொபைல் வளர்ச்சிக்கு மத்தியில், தூய்மையான மற்றும் பசுமையான மாற்று ஏரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த எரிபொருள்கள் இறக்குமதி செய்யாததாகவும், செலவு குறைந்த, சுதேசியான, மாசு குறைவானதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 63-வது எஸ்ஐஏஎம் ஆண்டு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டீசல் ஒரு அபாயகரமான எரிபொருள் என்றும், எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நாடு எரிபொருளை இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் டீசல் இஞ்ஜின் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க திட்டமிட்டிருப்பதாக இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாக செய்தி வெளியானது. மேலும், இந்த யோசனையை நிதியமைச்சரிடம் இன்றே பரிந்துரைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் கட்கரி, டீசல் வாகனங்களின் எண்ணிக்கையினைக் குறைப்பது பற்றிக் கூறும் போது, "கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர், 52 சதவீதமாக இருந்த (எண்ணிக்கையில்) டீசல் வாகனம் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

தற்போது ஆட்டோ மொபைல்களுக்கு 20 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் செஸ் (வானங்களின் வகையினைப் பொறுத்து 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை) விதிக்கப்படுகின்றது. எஸ்யுவி வகை வாகனங்களுக்கு 22 சதவீதம் செஸ் வரி உட்பட 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in