Published : 12 Sep 2023 06:29 AM
Last Updated : 12 Sep 2023 06:29 AM

பழங்குடியினர் நலவாரியம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோப்புப்படம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணை:

கடந்த 2007-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு பழங்குடியினர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்துக்கு 6 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, 2008-ம் ஆண்டு, அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக நெடுஞ்சாலைத் துறை முதன்மைப் பொறியாளர் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், பழங்குடியினர் நல இயக்குநர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியத்தை 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 எம்எல்ஏக்கள் உட்பட 14 அலுவல் சாரா உறுப்பினர்கள், 3 பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு திருத்தியமைக்கும்படி பரிந்துரைத்தார்.

இந்த பரிந்துரையைப் பரிசீலித்த தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரைதலைவராகக் கொண்டும், 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 பழங்குடியின சட்டப்பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய 14 அலுவல் சாரா உறுப்பினர்கள், 3 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின அலுவல் சாரா உறுப்பினர்களில் சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ பொன்னுசாமி, ஆற்காடு தொகுதி எம்எல்ஏ கு.சித்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர்களாக கடலூர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x