Published : 11 Sep 2023 07:09 AM
Last Updated : 11 Sep 2023 07:09 AM

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்: அமைச்சர் தகவல்

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி அரிமா சங்க லேபர் காலனி உயர்நிலைப் பள்ளி, சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம் உயர்நிலைப் பள்ளி, கிண்டி மடுவின்கரை மேல்நிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகளை பதிவு செய்யும் சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், சென்னை மாநகரட்சி மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதம், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடி செலவில், பிரம்மாண்டமான முறையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, திட்டப் பணிகள் மற்றும் வரைபடப் பணிகள் பொதுப் பணித் துறையினரால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்துக்கு முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுப்பணி துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். அவர் 1967, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியில் வென்று அமைச்சர், முதல்வர் பொறுப்புகளை வகித்துள்ளார். எனவே, அவரது பெயரில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் புதிய மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x