Last Updated : 15 Dec, 2017 11:23 AM

 

Published : 15 Dec 2017 11:23 AM
Last Updated : 15 Dec 2017 11:23 AM

புதிய நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற கிளை புறக்கணிப்பு: வழக்கறிஞர்கள் அதிருப்தி

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் உள்ளனர். மீதம் உள்ள 15 பணியிடங்களையும் நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. மாவட்ட நீதிபதிகளில் இருந்தும், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்களாகப் பணிபுரிவோர்களில் இருந்தும் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தற்போது பணிபுரியும் 60 நீதிபதிகளில் வழக்கறிஞர்களாக இருந்து நேரடியாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் டி.ராஜா, எஸ்.எஸ்.சுந்தர், ஜெ.நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் மட்டும் உயர் நீதிமன்ற கிளையில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 9 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இவர்கள் வழக்கறிஞர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வருபவர்கள். உயர் நீதிமன்ற மதுரை கிளையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் இந்தமுறை நீதிபதியாக தேர்வு செய்யப்படவில்லை. இதனால் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கத் (எம்பிஎச்ஏஏ) தலைவர் ஜான்வின்சென்ட் கூறியதாவது: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 14 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற கிளை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியிருப்பதாக நீதிபதிகளே பலமுறை தெரிவித்துள்ளனர். அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளுக்கு வழக்கறிஞர்கள் தான் காரணம். திறமையான வழக்கறிஞர்கள் அதிகளவில் உள்ளனர்.

அப்படியிருக்கும்போது நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்காததது வேதனையானது. நீதிபதிகள் நியமனத்தின்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதும், உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்களை புறக்கணிப்பதும் சமநிலை அணுகுமுறை இல்லாததை காட்டுகிறது. உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் போதிய அளவு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றார்.

உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் என்.இளங்கோ கூறியதாவது:

மதுரை கிளையை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு அவர்களின் திறமையை மெச்சும் வகையில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மதுரை கிளையில் 13 மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் பணிபுரிகின்றனர். நீதிபதிகள் நியமனத்தில் மதுரை கிளை வழக்கறிஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. வழக்கறிஞர்கள் பிரிவில் இருந்து நீதிபதிகள் நியமிக்கும் போதெல்லாம் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்களுக்கு 50 சதவீத பணி இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x