Last Updated : 27 Dec, 2017 11:16 AM

 

Published : 27 Dec 2017 11:16 AM
Last Updated : 27 Dec 2017 11:16 AM

இங்கே இவர்கள் இப்படி: வேகாக்கொல்லை சக்திவேல் - சாதிக்கும் சவுக்கு இளைஞர்

தா

ய்லாந்தின் பொருளாதார வளர்ச்சியில் 6 சதவீதத்தை மரம் வளர்க்கும் தொழில் நிர்ணயிப்பதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் சவுக்கு மரங்கள் அந்நாட்டின் மிகப்பெரிய வளம். அங்கு, சவுக்கு வளர்ப்பை சாதனை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர் கோன்சாக் என்ற ஆராய்ச்சியாளர்.

கோன்சாக்கிற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்றது வரலாற்றுப் பதிவு. தற்போது ஆஸ்திரேலியாவின் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் கோன்சாக், அண்மையில் இந்தியா வந்தபோது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுக்கு இளைஞர் சக்திவேலை தேடிவந்து சந்தித்தார்.

கோன்சாக் தேடிவந்து பாராட்டுமளவுக்கு சக்திவேல் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்? குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள வேகாகொல்லையைச் சேர்ந்த எம்.இ., பட்டதாரி இளைஞர் சக்திவேல். படித்த படிப்புக்கும் பார்க்கும் தொழிலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஆனாலும் சாதிக்கிறார் இந்த இளைஞர்.

டாக்டர் நிகோடமஸ்

சவுக்கு வளர்ப்பதால் பெரிதாக லாபம் பார்க்க முடியாது என்ற வாதத்தைப் பொய்யாக்கி சவுக்கு வளர்ப்பின் மூலம் ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் வரை வருமானம் பார்க்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சக்திவேல். இவரது நர்சரியில் உருவாக்கப்படும் சவுக்கு நாற்றுகள் இந்தியாவுக்குள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன. இதன்மூலம், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறார் இந்த முன்மாதிரி மனிதர்.

இதையெல்லாம் கேள்விப்பட்டுத்தான் கோன் சாக் நேரில் வந்து இவரைப் பாராட்டிச் சென்றிருக்கிறார். கோன்சாக் மட்டுமல்ல.. இந்தியாவின் முன்னணி சவுக்கு ஆராய்ச்சியாளரான டாக்டர் நிகோடமஸும் வேகாக்கொல்லையில் உள்ள சக்திவேலின் சாந்தி க்ளோனல் நர்சரிக்கு விசிட் அடித்து அவரைப் பாராட்டிச் சென்றுள்ளார்.

இரண்டு புதிய ரகங்கள்

இந்திய வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனம் தற்போது புதிதாக ஐ.எஃப்.ஜி.டி.பி - சி.ஹெச் - 1 மற்றும் சி.ஹெச்-5 என்ற இரண்டு உயர் ரக சவுக்கு இனங்களை கண்டு பிடித்துள்ளது. 20 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள இந்த ரகத்தை நட்டு வளர்க்க இந்தியாவில் டி.என்.பி.எல், ஏ.பி.பி.எல், உள்ளிட்ட நான்கு பேப்பர் மில்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவை இல்லாமல், தனிநபர் ஒருவருக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது அந்த நபர் சக்திவேல்.

நான்கு ஆண்டுகள் வளர்த்தால்தான் சவுக்கு மரம் பலன் தரும். ஆனால், இந்தப் புதிய ரகம் இரண்டே ஆண்டுகளில் அதே அளவு வளர்ந்து பயன்தரக் கூடியது. இந்த ரகத்திலிருந்து தனக்கு வழங்கப்பட்ட ஐநூறு கன்றுகளைக் கொண்டு 15 லட்சம் கன்றுகளை க்ளோனிங் முறையில் வளர்த்தெடுத்து விற்பனைக்கு வைத்திருக்கிறார் சக்திவேல்.

புவனேஸ்வர் டூ கன்னியாகுமரி

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் புவனேஸ்வர் முதல் கன்னியாகுமரி வரையிலும் சுமார் ஒரு கோடி எண்ணிக்கையிலான சவுக்கு மரக்கன்றுகளை இவர் விற்பனை செய்திருக்கிறார். ஐ.டி.சி் பேப்பர் நிறுவனத்துக்கு மட்டுமே 20 லட்சம் கன்றுகள் விற்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸுக்கு மூன்று லட்சம் கன்றுகள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன. வேகாக்கொல்லையில் மூன்று, குறிஞ்சிப்பாடியில் ஐந்து என மொத்தம் எட்டு ஏக்கரில் இவரது சவுக்குப் பண்ணை பரந்து விரிகிறது.

இதன் மூலம், தினமும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தியிருக்கும் சக்திவேல், அந்தப் பகுதி இளைஞர்களையும் மாற்றுத் தொழில்களை நோக்கி கவனத்தைத் திருப்ப வைத்திருக்கிறார். ஒரு காலைப் பொழுதில் சக்திவேலை அவரது நர்சரி பண்ணையில் சந்தித்துப் பேசினோம்.

ஆசிரியர் வருமானத்தைவிட..

“திருவண்ணாமலையில் எம்.இ., படித்துவிட்டு அதே கல்லூரியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது வேகாக்கொல்லையில் எனது அப்பா சின்னதாய் ஒரு நர்சரி வைத்திருந்தார். விடுமுறையில் ஊருக்கு வரும்போது நர்சரியில் அப்பாவுக்கு உதவி செய்வேன். அப்படி ஒருநாள், நர்சரியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் ‘அப்பா காலத்துக்கு பிறகு நாங்களெல்லாம் எந்த வேலைக்குப் போறது?’ என்று என்னிடமே கேட்டார்கள். அப்போதுதான், அப்பாவுக்குப் பிறகு இந்த நர்சரியை யார் எடுத்துப் பார்ப்பது என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. இந்தக் கேள்வி எழுந்த அடுத்த சில மாதங்களிலேயே ஆசிரியர் பணியை உதறிவிட்டு முழுவதுமாக நர்சரிக்குள் இறங்கிவிட்டேன்” என்று சொன்னார் சக்திவேல்.

சவுக்கு வளப்பில் சாதித்தது குறித்துப் பேசிய அவர், “இந்தத் தொழிலை இன்னும் பெரிய அளவில் செய்தால் ஆசிரியர் பணி கொடுத்த வருமானத் தைவிட கூடுதலாகச் சம்பாதிக்கலாம்; இன்னும் பலபேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கலாம் என தீர்மானித்துக் கொண்டு அதற்கான வேலைகளில் இறங்கினேன். அதற்காக உலக அளவில் பின்பற்றப்படும் சவுக்கு உற்பத்தி முறைகளைப் பற்றியெல்லாம் படித்தேன். அந்த அறிவைக் கொண்டு, புதுப்புது உத்திகளைப் பின்பற்றி ஒரு கன்றுகூட வீணாகாமல் நாற்றுகளை உற்பத்தி செய்தோம். அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினோம்.

இன்னும் மூன்றாண்டுகளில்..

உள்ளூர் சந்தையை மட்டுமே நம்பியிருந்தால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்பதால் இணையம் மூலமாக வியாபாரத்தை அபிவிருத்தி செய்ததால் இந்தியா முழுமைக்கும் மட்டுமின்றி வெளிநாட்டு ஆர்டர்களும் வரத் தொடங்கின. தேவைக்கேற்ப உற்பத்தியையும் அதிகரித்தோம். இது தான் நாங்கள் கடந்துவந்தபாதை” என்று சொன்னார்.

“இன்னும் மூன்றாண்டுகளில் நாட்டின் பேப்பர் தேவை பலமடங்கு அதிகரிக்கும். ஆனால், அப்போதைய தேவையை சமாளிக்கும் வகையில் இந்தியாவில் தற்போது மர உற்பத்தி இல்லை. எனவே, தோட்டங்களை வைத்திருப்போர் விவசாயத்தின் மாற்று உற்பத்தியாக இப்போதே சவுக்கை வளர்க்க ஆரம்பித்தால், வரும் ஆண்டுகளில் நல்ல வருமானம் ஈட்டலாம்” என்று சொல்லும் சக்திவேல், வரும் ஆண்டில் இரண்டு கோடி சவுக்குக் கன்றுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறாராம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x