Published : 26 Dec 2017 09:26 AM
Last Updated : 26 Dec 2017 09:26 AM

தமிழகத்தின் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு: தலைப்பொங்கலுக்கு புத்தாடைகள் வாங்கி வந்த புதுமண தம்பதியும் பலியான பரிதாபம்

மதுராந்தகம் மற்றும் கோவிப்பட்டி அருகே நேற்று நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். தலைப்பொங்கலைக் கொண்டாட புத்தாடைகள் வாங்கி வந்த புதுமணத் தம்பதியும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள செம்பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு. இவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 பேர் காரில் சென்னை சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் புதுக்கோட்டைக்கு நேற்று காரில் புறப்பட்டனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

மதுராந்தகம் அருகே ஆத்தூர் ஏரிக்கரை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டீசல் இல்லாமல் கார் நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து காரை சாலை ஓரம் நிறுத்தியிருந்தனர். பின்னர் ஓட்டுநர் அஜீத்குமார் டீசல் வாங்கி வந்து காரில் ஊற்றிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் காரில் இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராதவிதமாக கார் மீது வேகமாக மோதியது. இதனால் கார் அருகாமையில் இருந்த கால்வாயில் தலைகீழாகக் கவிழ்ந்தது. கால்வாயில் நீர் ஓடிக் கொண்டிருந்ததால் காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் நீருக்குள் மூழ்கினர்.

அஜீத்குமார் மற்றும் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சுங்கச் சாவடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். இதில், சரோஜா, மாரிக்கண்ணு ஆகிய இருவரை மட்டுமே மீட்க முடிந்தது.

புதுக்கோட்டை செம்பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி தமிழ்ச்செல்வி(60), முருகவேல் மகன் தினேஷ் குமார்(24), கருப்பையா மனைவி பிரபாவதி(48), மோகன் மனைவி ராதிகா(35), சின்னராஜ் மகன் இளம்பரிதி(6) ஆகிய 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக அச்சிறுப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த அஜீத்குமார், சரோஜா, மாரிக்கண்ணு ஆகியோர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து நடைபெற்ற ஆத்தூர் ஏரிக்கரை பகுதி, தடுப்பு இல்லாத குறுகிய சாலை வளைவாக உள்ளது. இப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், சாலையோரம் தடுப்புகள் அமைத்து, விபத்து பகுதி எனக் குறிப்பிடும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும். இப்பகுதியில் போக்குவரத்து போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவில்பட்டியில் 5 பேர் பலி

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மினி லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் தாமிரபரணிக் கரையில் உள்ள பக்தவச்சலம் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஜவுளிக்கடை தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன்(62) என்பவர் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, திருநெல்வேலியில் துணிகள் வாங்கிக்கொண்டு ஊருக்கு காரில் திரும்பினர்.

காரில், தீனதயாளனுடன், இவரது மனைவி கனகவள்ளி(52), மகள்கள் ஆனந்த லெட்சுமி(27), திவ்யஜோதி(22), தாய் வரதராஜமணி(73), ஆனந்த லெட்சுமியின் கணவர் சரவணகுமார்(31) ஆகியோர் இருந்தனர். காரை சரவணகுமார் ஓட்டினார். கன்னியாகுமரி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் டயர் உரசி வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையின் மறுபுறம் சென்றது.

அப்போது, திருநெல்வேலி நோக்கிச் சென்ற மினி லாரி மீது நேருக்கு நேர் கார் மோதியது. இதில், தீனதயாளன், அவரது மனைவி கனகவள்ளி, மகள் ஆனந்த லெட்சுமி, மருமகன் சரவணகுமார், தாய் வரதராஜமணி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திவ்யஜோதி பலத்த காயம் அடைந்தார்.

நாலாட்டின்புதூர் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த திவ்யஜோதி, மினி லாரி ஓட்டுநரான, திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்த பாலமுருகன்(46), உடன் வந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த பாண்டியராஜன்(36) ஆகியோர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. ஆனந்த லெட்சுமிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தலைப்பொங்கலைக் கொண்டாட ஜவுளி வாங்கிவிட்டு வந்தபோது விபத்தில் சிக்கி ஆனந்த லெட்சுமி தனது கணவருடன் உயிரிழந்துள்ளார். நாலாட்டின்புதூர் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x