Published : 02 Dec 2017 09:23 AM
Last Updated : 02 Dec 2017 09:23 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 பெண்கள் உட்பட 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து 54 நீதிபதிகள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது புதிய நீதிபதிகளாக எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நியமிக்கப்பட்டு, நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் அனைவரும் ஏற்கெனவே மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றியவர்கள். தற்போது 6 பேர் பதவியேற்றதை அடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே 7 பெண் நீதிபதிகள் பணியாற்றிவருகின்றனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 6 பேரில் 4 பேர் பெண்கள். இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

பதவியேற்பு விழாவில் புதிய நீதிபதிகளை வரவேற்று, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பேசும்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில், பெண் நீதிபதிகள் எண்ணிக்கை முதல்முறையாக 11 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மும்பை உயர் நீதிமன்றத்திலும் தற்போது 11 பெண் நீதிபதிகள் உள்ளனர். அதில் ஒருவர் 2 தினங்களில் ஓய்வுபெறுகிறார். அதனால், நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றம் என்ற பெருமை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கிடைக்கப்போகிறது. நீதிபதிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், வழக்குகளின் தேக்கமும் குறையும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் செயலாளர் கமலக்கண்ணன், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.நளினி, லா அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோரும் வரவேற்றுப் பேசினர்.

நன்றி தெரிவித்து நீதிபதி எஸ்.ராமதிலகம் பேசும்போது, ‘‘பெண் குழந்தை என்றாலே சாபக்கேடு என்று நினைத்த காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் நான் பிறந்தேன். ஆனால், என் பெற்றோர் பெண் குழந்தைகளை சாபமாகக் கருதாமல், ஒரு வரமாக நினைத்து நல்ல கல்வி புகட்டினர். வழக்கறிஞர் தொழிலைத் தேர்ந்தெடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தனர். அதனால்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உயர் நீதிமன்றத்தில் நானும் ஒரு நீதிபதியாக பதவியேற்க முடிந்தது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

மற்ற நீதிபதிகளும் நன்றி தெரிவித்துப் பேசினர். நீதிபதி பி.ராஜமாணிக்கம் பேசும்போது, தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த மனைவி தற்போது இல்லை என்று கூறி கண்கலங்கினார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிகுமார், எம்.துரைசாமி,எம்.சத்திய நாராயணன்,என்.கிருபாகரன், எஸ்.விமலா, எஸ். வைத்தியநா தன், டி.எஸ்.சிவஞானம், டி.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x