Published : 07 Sep 2023 04:43 PM
Last Updated : 07 Sep 2023 04:43 PM

புதிய முகப்பு, செல்ஃபி பாயின்ட்: வேற லெவலுக்கு மாறப்போகும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம்

அம்ரித் பாரத் ரயில்நிலைய திட்டத்தில் புதுப்பிக்கப்படவுள்ள ஸ்ரீரங்கம் ரயில்நிலைய முகப்பு மாதிரி படம்

திருச்சி: அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கோயில் கோபுர வடிவில் முகப்பு, செல்ஃபி பாயின்ட் போன்றவை அமைக்கப்பட உள்ளன. மேலும், காத்திருப்பு அறை, டிக்கெட் கவுன்ட்டர்கள், விஐபி ஓய்வு அறை போன்றவை புதுப்பிக்கப்பட உள்ளன.

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணி களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப் பட்டு தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பணி கடந்த வாரம் தொடங்கியுள்ளது.

அதன்படி, பழைய நுழைவு வாயில் மற்றும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து இந்த ரயில்நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதில், ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் மாதிரி முகப்பு அமைக்கப்படுவதுடன், காத்திருப்பு அறை, டிக்கெட் கவுன்ட்டர்கள், விஐபி ஓய்வு அறை போன்றவை புதுப்பிக்கப்படும்.

ரயில்நிலையம் முகப்பு பகுதியில் செல்ஃபி பாயின்ட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிக்கான வசதிகள், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்து அடுத்தாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x