Published : 06 Sep 2023 05:30 PM
Last Updated : 06 Sep 2023 05:30 PM

“சனாதன தர்மத்தை முன்வைத்து 2024, 2026 தேர்தல்களை சந்திக்கத் தயாரா?” - உதயநிதிக்கு அண்ணாமலை சவால்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல்களை சனாதன தர்மத்துக்கான தேர்தலாக வைத்துக்கொள்வோம்” என்று அமைச்சர் உதயநிதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பிற்பகலில் சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் வானமாமலை மடத்தின் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜூயரை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: ''என் மண் என் மக்கள் யாத்திரை ஶ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கும் முன் ஆண்டாள் தாயார் மற்றும் ஜீயரை சந்திப்பதற்காக வந்துள்ளோம்.

சனாதனத்தை ஒழிப்பதில் உதயநிதி உறுதியாக இருந்தால்தான் தமிழகத்திலும் இந்தியாவிலும் மாற்றம் வரும். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ள ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை மாற்ற வேண்டும். அதற்கு முதல்வர் ஒப்புக்கொள்வாரா? முடிந்தால் செய்து பாருங்கள். துர்கா ஸ்டாலின் கோயிலில் வழிபடுவதையும், வீட்டில் கணபதி ஹோமம் வளர்ப்பதையும், சபரீசன் திருச்செந்தூரில் சத்ரு சம்கார யாகம் நடத்துவதையும் முதலில் உதயநிதி ஒழிக்க வேண்டும். சனாதனம் என்றால் என்ன என்பதை உதயநிதி புரிந்துகொள்ள வேண்டும்.

இதே ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆண்டாள் முன் திருப்பாவையின் 30 பாசுரங்களையும் பாடி உள்ளார். இவர்கள் சொல்லக் கூடிய வர்ணாசிரமம் என்பது இவர்கள் கிளப்பிவிட்டது. அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்வதுதான் சனாதன தர்மம். அதனால்தான் ஶ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. 2022 டிசம்பரில் நான் பெருமை மிகுந்த கிறிஸ்தவன் எனக் கூறிய உதயநிதிக்கு சனாதன தர்மத்தை பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதத்தை வேரறுப்போம் என அவர் கூறி இருந்தாலும் முதல் கண்டனக் குரல் என்னிடம் இருந்துதான் வந்திருக்கும். பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக அமர வைத்ததுதான் சனாதன தர்மம். ஆனால், திமுக அவருக்கு வாக்களிக்காமல் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களித்தது. அதேபோல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது திமுக ஆதரவு அளிக்கவில்லை.

செப்டம்பர் 18 முதல் 23 வரை நாடாளுமன்றம் எதற்காக கூடுகிறது என்பது தெரியாது. பாரதம் என்ற பெயர் வருகிறதா, ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிறதா எனத் தெரியாது. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து குழு அமைத்து இருப்பதை பாஜக வரவேற்கிறது. கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என எழுதி உள்ளார். எல்லா இடத்திலும் எல்லாரும் செல்வதற்கு உரிமை உள்ளதுதான் சனாதன தர்மத்தின் மகத்துவம். ஆனால், வேறு மதத்தினரின் கோயில்களுக்கு இந்துகள் செல்ல முடியாது. எல்லா மாதத்தில் இருந்து யார் வந்தாலும் அரவணைக்கும் சக்தி சனாதன தர்மத்திற்கு உண்டு. சனாதானம் என்பதற்கு ஆதியும் அந்தமும் இல்லாத தர்மம் என்று பொருள்.

தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துகள் என்று கூறி ஒட்டு வாங்கி விட்டு, தேர்தல் முடிந்த பின் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறுவார்கள். உதயநிதிக்கு சவால் விடுகிறேன்... 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களை சனாதன தர்மத்துக்கான தேர்தலாக வைத்துக் கொள்வோம். நீங்கள் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என வாக்குறுதி அளியுங்கள், நாங்கள் சனாதன தர்மத்தை காப்பாற்றுவோம் என்று சொல்கிறோம். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்ப்போம்'' என்று அவர் கூறினார். மாவட்ட தலைவர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x