Published : 03 Dec 2017 08:10 AM
Last Updated : 03 Dec 2017 08:10 AM

காவலர் குடும்பத்தினரின் நலனுக்காக மயிலாப்பூரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்

காவலர் வாரிசுகள், குடும்பத்தினருக்காக தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். வெற்றி கிடைக்கும்வரை போராட வேண்டும் என முகாமில் கலந்து கொண்டவர் களுக்கு அறிவுரை வழங்கினார்.

போலீஸாரின் வாரிசுகள் மற்றும் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு நகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி போலீஸார், ஓய்வுபெற்ற போலீஸார், பணியின்போது மரணம் அடைந்த போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குடும்பத்தினர், வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மயிலாப்பூர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நேற்று காலை முதல் நடந்தது.

இதில் 10-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வித் தகுதி உள்ளவர்கள் கலந்துகொண்டனர். சுமார் 2,000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

நேரடித் தேர்வுகள்

சென்னை காவல்துறை ஏற்பாடு செய்த இந்த வேலைவாய்ப்பு முகாமில் 42 தனியார் நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள், அலுவலர்கள் மூலம் வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் நேரடியாக நடத்தப்பட்டன. மாலையில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:

காவலர் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்று கூறினேன். இதையடுத்து கடந்த 3 மாதங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு அதன் அடிப் படையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு தகுதி பெற்றவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

சிறப்பு வகுப்புகள்

வெற்றி கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு மீண்டும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். வெற்றி கிடைக்கும்வரை முயற்சி செய்யுங்கள். வேலைவாய்ப்பு முகாம் மட்டுமின்றி சுய தொழில் தொடங்க வங்கிகளில் கடன் உதவி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி (தலைமையிடம்), எம்.சி.சாரங்கன் (தெற்கு), இணை ஆணையர் மனோகரன் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x