Published : 03 Sep 2023 06:30 PM
Last Updated : 03 Sep 2023 06:30 PM

ரத்தினகிரி சிஎம்சி வளாகத்தில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முக்கிய சிகிச்சைகள் பெற முடியாமல் தவிக்கும் காவலர்கள்

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரத்தினகிரி சிஎம்சி வளாகத்தில் இருதயம் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாட்டின் எல்லையை இரவு, பகலாக ராணுவ வீரர்கள் பாதுகாப்பதால் நாடு பாதுகாப்பாக இருப்பதை நாம் உணர முடியும். அதேபோல், உள் நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பது காவல் துறையை நம்பியுள்ளது. சட்டம்-ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் காவல் துறையின் செயல்பாடு இல்லாமல் மக்கள் நிம்மதியாக இரவு உறக்கத்தை தொடர முடியாது.

பொதுவாகவே, காவலர் பணி என்பது சமூக பணி என்றே அழைக்கப்படுகிறது. சமூகத்தை பாதுகாக்கும் பணிக்கு வந்தவர்களுக்கு நேரம், காலம் எதுவும் இருப்பதில்லை. எந்த நேரத்திலும் குடும்பத்தை மறந்து பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். உழைத்து, உழைத்தே ஓடாய் போகும் காவலர்கள் அவர்களின் குடும்பத்தை பாதுகாக்க இருப்பது மருத்துவக் காப்பீட்டு திட்டம் மட்டுமே. அதுவும், இல்லாவிட்டால் பல காவலர் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

அப்படி இருக்கின்ற மருத்துவக் காப்பீட்டு திட்டமும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காவலர்களுக்கு அவசர தேவைக்கு பயன்படுத்த முடியாமல் இருப்பதாக காவல் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத காவலர்கள் கூறும்போது, ‘‘காவல் துறை ஆயுதப்படையில் பணியில் சேர்ந்து ஊர், ஊராக சுற்றிவிட்டு காவல் நிலையத்துக்கு வரும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டாலும் வேலை, வேலை என்றுதான் சுற்றுகிறோம்.

தொடர் பணியால் எங்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு 40 முதல் 45 வயதுக்குள் ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதய பாதிப்பு என ஏதாவது ஒரு உடல் உபாதைகளை சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறோம். காவல் துறையினருக்கு குடும்ப மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாதந் தோறும் ரூ.295 வீதம் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.7.5 லட்சம் தொகைக்கு சிகிச்சை பெற முடியும். எங்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்திருக்கும் மருத்துவ மனைகளுக்கு சென்றால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு செலவில்லாமல் சிகிச்சை பெற முடியும். காப்பீட்டு நிறுவனங்களின் சிகிச்சையை தாண்டி வேறு பெரியளவில் சிகிச்சை பெற வேண்டுமானாலும் காவல் துறை நண்பர்களின் உதவியைத்தான் நாட வேண்டும். காவலர்களிடம் வசூல் செய்துகொடுக்கும் பணம் மட்டுமே பல நேரங்களில் எங்களின் உயிரை காப்பாற்றி வருகிறது.

எங்களின் நிலைமை இப்படி இருக்கின்ற நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலர்களின் நிலைமை காப்பீட்டு திட்டத்தால் பயன்பெற முடியாத நிலை உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சிஎம்சி மருத்துவமனைக்கு தான் காவலர்கள் அதிகம் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகின்றனர்.

அங்கு காவல் துறையினருக்கு வழங்கிய காப்பீட்டு திட்டத்தில் இதுவரை சிகிச்சை பெற்று வந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் காவலர் குடும்பங்கள் உள்ளனர். இவர்கள், அனைவரும் சிஎம்சியை நம்பித்தான் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால் இருதயம், மூளை, நரம்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு ரத்தினகிரி வளாகத்துக்குச் செல்லுமாறு கூறுகின்றனர்.

அங்கு சிகிச்சைக்கு சென்றால் எங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முடியாது என்று கூறுகின்றனர். இதனால், பல காவலர்களின் குடும்பத்தினர் சிகிச்சைக்கு பணத்தை திரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். பலர் மாவட்ட காவல் நிர்வாகத்தின் பரிந்துரையால் சிகிச்சை கட்டணத்தில் சலுகை பெற்று வருகிறோம்.

இருந்தாலும், நாங்கள் மாதந்தோறும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பணத்தை கட்டியும் எந்த பிரயோஜனமும் இல்லை. உங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தில் சிகிச்சை அளிக்க முடியாது என சிஎம்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கின்றனர். அவசரத்துக்கு அவர்களை நம்பித்தான் அங்கு செல்கிறோம். கடைசியில் அவர்களும் எங்களை கைவிடுவதால் நாங்கள் எங்கு செல்வது. இதற்கு என்ன காரணம் என்றாவது தெளிவாக கூறினால் அதற்கு ஏற்ப நாங்கள் வேறு இடங்களுக்கு செல்வோம்’’ என தெரிவித்தனர்.

இது தொடர்பாக சிஎம்சி நிர்வாகத்தரப்பில் விசாரித்தபோது, ‘‘ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்தை இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைக்குமாறு விண்ணப்பித்துள்ளோம். அந்த இணைப்பு பணி முடியாமல் இருப்பதால் இதுபோன்ற சிக்கல் இருக் கிறது. இதற்காக, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரு கிறோம்’’ என மட்டும் தெரிவித்தனர்.

காவல் துறையினருக்கு இருக்கும் பிரச்சினைகளை தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இல்லா விட்டால் சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறைக்கு சற்று கால தாமதம் ஏற்படும் என தெரிவித்தனர்.

இது குறித்து, காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது ‘‘இந்த தகவல் எங்கள் கவனத்துக்கு இப்போதுதான் வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x