Published : 02 Sep 2023 05:25 AM
Last Updated : 02 Sep 2023 05:25 AM

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விவரங்கள் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விண்கலம் திட்டம் குறித்த விவரங்கள் சேர்க்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் மன்றம் இயங்கி வருகிறது. இதை மேம்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கி, இந்த நிகழ்ச்சிகளை நடத்த ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகள் வாயிலாக மாணவர்களுக்கு தமிழ்மொழி சிறப்பு குறித்த தகவல்கள் விளக்கப்பட உள்ளன. இத்திட்டம் தொடர்பாக 162 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு தமிழ் கூடல்குறித்த விளக்கங்களை எடுத்துரைத்தார். அப்போது தனியார் பள்ளிகளிலும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு அறிவுரை: இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாங்குநேரி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது துறைசார்ந்த அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அளிக்கும் பரிந்துரைகளையும் சேர்த்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சந்திரயான்-3 விண்கலம் குறித்த விவரங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது. இதுதொடர்பான கூட்டம் செப்.11-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் விவாதித்து வரும் கல்வியாண்டில் சேர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.

மாநிலக் கல்விக் கொள்கையை ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் குழுவினர் வகுத்து வருகின்றனர். அரசிடம் அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தபின், ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆளுநர் தாமதப்படுத்தினால் அடுத்தகட்ட நடவடிக்கையை முதல்வர் எடுப்பார்.

அமெரிக்காவுக்கும் செல்வோம்: கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று வருகிறோம். அதன்படி 2 நாள் பயணமாக நிறைய மாணவர்களை சிங்கப்பூர், மலேசியாவுக்கு செப்.4-ம் தேதி அழைத்து செல்கிறோம். அதேபோல், அமெரிக்காவில் உள்ள டிஸ்னி ஸ்டியோவுக்கு அழைத்து செல்வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதலாக ஒரு தேர்வை நடத்தாமல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவதற்குரிய பரிந்துரை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அரசாணை 149-யை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x