Published : 18 Dec 2017 09:30 AM
Last Updated : 18 Dec 2017 09:30 AM

2016-ம் ஆண்டு தேர்தலில் அமைக்கப்பட்ட பார்வையற்றோருக்கான சிறப்பு வாக்குச்சாவடி நீக்கம்

ஆர்.கே.நகர் தொகுதியில் அமைக்கப்பட்ட பார்வையற்றோருக்கான சிறப்பு வாக்குச்சாவடி, இடைத்தேர்தலில் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட ரெட்டைகுழி தெருவில் இயங்கி வரும் தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம், வில்லிவாக்கம் தொகுதி அம்மன் குட்டை பகுதியில் உள்ள தொழுநோயாளிகள் குடியிருப்பு ஆகிய 2 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தில் பார்வையற்றோர் 31 பேர் தங்கி தொழில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் வெளியில் சென்று சிரமப்பட்டு வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக, அப்போது சென்னை மாவட்ட தேர்தல் அலுவலராக இருந்த பி.சந்திரமோகன், சிறப்பு வாக்குச்சாவடியை ஏற்படுத்தி இருந்தார். இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் 258 வாக்குச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பார்வையற்றோருக்கான சிறப்பு வாக்குச்சாவடி இடம்பெறவில்லை. மாவட்ட தேர்தல் நிர்வாகம் , மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளை தேர்தல் அலுவலர்கள் எப்படி அணுக வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் வீடியோ காலிங் மூலம் சைகை மொழியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பார்வையற்றோருக்கான வாக்குச்சாவடியை நீக்கி இருப்பது, அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த அமைப்பான ‘மாத்தி யோசி’ அமைப்பின் நிறுவனர் எஸ்.மோகன்ராஜிடம் கேட்டபோது, ‘‘பார்வையற்றோர் நீண்ட தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க சிரமப்படுவதை தடுப்பதற்காகத்தான் சிறப்பு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டது. இதை இந்த தேர்தலில் நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி.நாயரிடம் கேட்க முயன்றபோது அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x