Published : 22 Dec 2017 11:20 AM
Last Updated : 22 Dec 2017 11:20 AM

பூட்டிய வீடுகளை காக்கும் ‘மதுரை காவலன்’: வெளியூர் செல்பவர்கள் இனி நிம்மதியாக இருக்கலாம்- மதுரை காவல்துறையில் புதிய செயலி அறிமுகம்

பூட்டிய வீடுகளில் கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வெளியூர் செல்லும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலுள்ள புத்தகம் ஒன்றில் தங்கள் முகவரி, தொடர்பு எண்களை எழுதி வைத்தால், போலீஸ் கண்காணிக்கும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

இருப்பினும், தற்போது மதுரை புறநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது அதிகரிக்கிறது. இதைத் தடுக்க, மாவட்ட காவல்துறை பூட்டிய வீடுகளை கண்காணிக்க உதவ ‘மதுரை காவலன்’ என்ற பெயரில் பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலியை நேற்று அறிமுகப்படுத்தியது. மதுரை பசுமலையைச் சேர்ந்த தினேஷ்பாண்டி என்பவர் இச்செயலியை உருவாக்கி, காவல்துறையிடம் வழங்கி உள்ளார்.

மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார், காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ஆகியோர் புதிய சேவைக்கான செயலியை அறிமுகப்படுத்தினர்.

இதுபற்றி டிஐஜி கூறியதாவது: பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் சேவை, புகார் அனுப்பும் வசதி, காவல்துறை அறிவிப்பு, விழிப்புணர்வு, அவசர சேவை விவரம், உயர் அதிகாரிகள், காவல்நிலைய தொடர்பு எண்கள் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோரில் இருந்து ‘மதுரை காவலன்’ என டைப் செய்து இச்செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது, தனது வீட்டை கண்காணிக்க, முகவரியுடன் கூடிய ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, ஆதார் ஆகிய ஏதேனும் ஒன்றின் எண்ணை பதிவு செய்து செயலியை பயன்படுத்தலாம்.

தவறாக பயன்படுத்தக் கூடாது

காவல் நிலையத்துக்கு வர முடியாதவர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம். தங்கள் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்கள் சுற்றினாலும், போட்டோ எடுத்து இச்செயலி மூலம் உடனுக்குடன் அனுப்பலாம். அவர் பற்றிய ஆய்வில் குற்றவாளி எனத் தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் குற்றச் செயல்களை முன் கூட்டியே தடுக்கலாம். புகார்களை புகைப்படமாக எடுத்தும் அனுப்பலாம். அவசர உதவி சேவை மையங்களின் எண்கள், மதுரை மாவட்ட காவல் நிலையம், பொறுப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்களும் இச்செயலியில் உள்ளன. மதுரை மாவட்ட காவல்துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள், விழாக்கள், சிறப்பு தொகுப்பு, புகைப்படங்களை பகிரலாம். பதிவு விவரம் உண்மையாக இருக்கவேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் தகவல்களை பொறுத்து பாதுகாப்பு அளிக்கப்படும். செயலியில் பதிவு செய்தவர்கள் விவரங்களை, வேறு நபர்கள் அறிய முடியாது. இச்செயலியை யாரேனும் தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செயலியை உருவாக்கிய தினேஷ்பாண்டி கூறியதாவது: இப்புதிய செயலியில் பூட்டிய வீடு கவனி, விதிமுறை, காவல்நிலையம், மாவட்ட நிலையங்கள் என 4 பகுதி இருக்கும். ‘மதுரை காவலன்’ என்ற ‘ஆப்’ பிலுள்ள நான்கு பகுதிகளில் தேவையான பகுதியை தேர்வு செய்து தகவல் அனுப்பலாம். தகவல்களை ஏற்பதற்கான ஒப்புகை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தானாகவே புகார்தாரருக்கு வரும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பூட்டிய வீடுகளை கண்காணிக்கலாம். தனிநபர் அனுப்பும் தகவல்கள் பாதுகாக்கப்படும். இப்புதிய வசதியால் பூட்டிய வீடுகள் பாதுகாக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x