Published : 16 Dec 2017 11:01 AM
Last Updated : 16 Dec 2017 11:01 AM

புதிய கல்பாக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி சிறுவன், மூதாட்டி உட்பட 3 பேர் பலி

புதிய கல்பாக்கம் அருகே ஆளுநரின் பாதுகாப்புக்கு வந்துவிட்டு திரும்பும்போது, போலீஸ் வாகனம் ஒன்று ஈசிஆர் சாலையைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்துவிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஈசிஆர் சாலை வழியாக சென்னைக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தார். ஆளுநரின் பாதுகாப்புக்காக காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற ஒரு ஜீப் கோவளம் அருகே ஆளுநரின் கான்வாய் வாகனங்களை அனுப்பிவிட்டு, மீண்டும் ஈசிஆர் சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, புதிய கல்பாக்கம் அருகே ஈசிஆர் சாலையில் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது அந்த ஜீப் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(33) மற்றும் கார்த்திகேயேன்(10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இருசக்கர வாகனத்தின் மீது மோதிய போலீஸ் ஜீப், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதி நின்றது. இதில், பேருந்துக்காக நிழற்குடையில் அமர்ந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி கவுசல்யா (70) என்ற மூதாட்டியின் 2 கால்களும் முறிந்தன. சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான கிராம மக்கள் திரண்டு போலீஸாரின் ரோந்து வாகனத்தை அடித்து உடைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

ஆளுநரின் செயலர் விளக்கம்

இந்நிலையில் ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் விபத்து ஏற்படுத்தியதாக வெளியான செய்தி தவறானதாகும். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட வாகனம், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரால் முன் பாதுகாப்பு அறிவுறுத்தலுக்காக பயன்படுத்தப்படுவதாகும். எனவே, ஆளுநர் வருகையின்போது எந்த ஒரு விபத்தும் நடக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x