Published : 30 Aug 2023 04:29 PM
Last Updated : 30 Aug 2023 04:29 PM

காவிரி வாரிய ஆணையத் தலைவரை மாற்ற வலியுறுத்தி தஞ்சை ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அங்கு நடந்த விவாதத்தின் விவரம்:

சுவாமி மலை சுந்தர.விமலநாதன்: “காவிரியில் தண்ணீர் தமிழகத்துக்கு வழங்காமல் வஞ்சித்தும், தமிழக அரசு அதிகாரிகளை மிரட்டல் விடுத்தும், நடுநிலை தவறிய காவிரி மேலாண்மை வாரிய ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும், இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விலையை குறைத்தது போல், அனைத்து விவசாய விளைப் பொருட்களின் விலையை 100 சதவீதம் குறைக்க வேண்டும். மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், அரசு ஆணைப்படி பங்கேற்க வேண்டிய அரசு அதிகாரிகள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உள்நாட்டு மீனவர்களின் நலனுக்காக அங்கு முதலைப் பண்ணை அமைக்க வேண்டும்.”

திருவிடைமருதூர் யுவராஜ்: “சாத்தனூரில் வாய்க்காலைத் தூர்த்து சாலை அமைத்துள்ளனர். அந்தச் சாலை அகற்றி விட்டு, மீண்டும் அந்த வாய்க்காலைத் தூர் வார வேண்டும், மோசமாக உள்ள கும்பகோணம்-காரைக்கால் சாலையைச் சீர் செய்ய வேண்டும்.”

திருப்பனந்தாள் சுரேஷ்: “மணிக்குடி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சமைப்பதற்கான காஸ் சிலிண்டர் பற்றாக்குறையாக உள்ளதால், அதனை கூடுதலாக வழங்க வேண்டும், சிக்கல் நாயக்கன்பேட்டையில் ஆபத்தான நிலையிலுள்ள 3 பனை மரங்களை அகற்ற வேண்டும்.”

தமிழ்நாடு விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த செந்தில்: “திருமண்டக்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும், தேங்காய் உள்ளிட்ட அனைத்து விளைப் பொருட்களுக்கான ஆதார விலையை மத்திய அரசு அறிவித்து அரசாணையை வெளியிட வேண்டும், தண்ணீர் தட்டுப்பாட்டால் சம்பா சாகுபடி கேள்விக் குறியாகியுள்ள நிலையில், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகளைக் கொண்ட உயர் மட்ட ஆயத்த கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.”

பட்டுக்கோட்டை வீரசேனன்: “சந்திராயன் 3 வெற்றி பெற்றதற்காக உழைத்த விஞ்ஞானி வீரமுத்துவேல் மற்றும் செஸ் போட்டியில் 2-ம் இடம் பெற்ற பிரக்ஞானந்தா ஆகியோருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கவும், தரிசு நிலங்கள், புறம் போக்கு இடங்களில் பனை விதையை விதைக்க வேண்டும். பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மக்களுக்கான சேவையை அங்குள்ள அதிகாரிகள் செய்வதில்லை. மேலும், அங்குள்ள அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.”

திருவோணம் ஆர்.ராமசாமி: “சிவவிடுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. 15-க்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து கொண்டு பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்களை வரை கடிக்கின்றது.”

மதுக்கூர் ஏ.பி.சந்திரன்: “மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 75 நாட்களுக்கு மேலாகியும், கடைமடை பகுதிக்கு இன்னமும் வரவில்லை. இதனால் குறுவை பயிருக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 1 ஏக்கருக்கு ரூ. 45 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், மதுக்கூரில் வேளாண்மை அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும்.”

ஆம்பலாப்பட்டு அ.தங்கவேல்: “பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பாநாடு பகுதிகளில் சம்பா நடவுப் பணி தொடங்கும் நிலையில், தனியார் விதை விற்பனை மையங்களில், நெல் விதைகளை ரூ.50 கூடுதலாக விற்பனை செய்வதை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர் வளத்துறையில் போதுமான பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.”

தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.ராமசாமி: “தமிழக அரசு கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் அறிவிக்க வேண்டும்,தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏரி,குளங்கள் மற்றும் நீர் நிலைகளைத் தூர் வாரி, வரும் மழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, அந்த மழை நீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”

திருமங்கலக்கோட்டை கிராம வாசிகள்: “திருமங்கலக்கோட்டை மேலையூரிலுள்ள 40 ஏக்கர் பரப்பளவிலுள்ள திருமத்தேரியில் கடந்த 2014-ம் ஆண்டு 10 ஏக்கர் மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு மீன் வளப்பதற்காக குட்டைகள் அமைத்தால், சுமார் 300 ஏக்கர் நிலம் பாதிக்கப்படும். தற்போது அங்கு கட்டிடம் எழுப்புவதாக கூறப்படுகிறது, இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்”

பாபநாசம் கே.எஸ்.முகம்மது இப்ராஹீம்: “நிகழாண்டில் பருத்தியின் விலை குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாபநாசம் வட்டங்களில் குறுவை நெற்பயிரை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை பிடிக்க வேண்டும். கணபதி யக்கிரஹாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்”

தஞ்சாவூர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்திரன்: “தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தருவதற்காக, கர்நாடக அரசை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். குறுவை காய்ந்து, சம்பா பொய்த்துப் போக வாய்ப்புள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்க மாவட்டமாக, மத்திய - மாநில அரசுகளை அறிவித்து, பேரிடர் நிவாரணமாக 1 ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். கொள்முதல் நிலையத்தில் நடந்து வரும் முறைகேட்டைத் தடுக்க கொள்முதல் தொடர்பான கூட்டங்களில் கொள்முதல் நிலையத்திலுள்ள பட்டியல் எழுத்தர், உதவியாளர், சுமைதூக்குபவர்கள், லாரி ஒட்டுநர்கள், லாரி தரகர்கள் ஆகியோரை பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகா அரசையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆணையரை மாற்ற வேண்டும், உடனடியாக தமிழக அரசு காவிரியில் தண்ணீர் பெற்றத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள், மாவட்ட ஆட்சியரின் மேஜை முன்பு முற்றுகையிட்டு, அவர்கள் வெளிநடப்பு செய்து, அலுவலக வாயில் முன்பு அனைத்து விவசாயிகள் திரண்டு கண்டன முழக்கமிட்டனர்.

இதேபோல் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஆர். சுகுமாறன் தலைமையில் விவசாயிகள், காவிரி நீர் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து, மண் பானையில் தண்ணீரை நிரப்பி, தண்ணீர் காவடி எடுத்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x