Published : 31 Dec 2017 02:22 PM
Last Updated : 31 Dec 2017 02:22 PM

அரசியலையும் ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தக் கூடாது: கி.வீரமணி பேட்டி

ஆன்மிக அரசியல் என்பது ரஜினியின் குழப்பத்தைக் காட்டுகிறது. அரசியலையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தக் கூடாது என்றுதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்திருக்கிறார்; மேலும் அவர் ஆன்மிக அரசியலில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருக்கிறார். எந்த ஓர்அமைப்பும், யாரும் அரசியலுக்கு வரலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங்கும்போது, அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? என்ன செயல் முறை? எதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்? என்பதைப் பொறுத்துத்தான் அந்தக் கட்சிக்கு மக்களுடைய வரவேற்போ, எதிர்ப்போ இருக்கும்.

எங்களைப் போன்றவர்கள், அரசியலில் மிகப்பெரிய அளவிற்கு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயகத்தையும், மதச் சார்பின்மையையும், சமூக நீதியையும், பகுத்தறிவு அடிப்படையில், பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பை மையப்படுத்துவதாக இருந்தால், நிச்சயமாக அதனை வரவேற்கக்கூடிய நிலையில், தெளிவாக கருத்துகளைக் கூறுவோம்.

அதேநேரத்தில், ஆன்மிக அரசியல் என்று அவர்கள் சொல்வது இருக்கிறதே, அரசியலையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. இது முற்றிலும் அவருடைய குழப்பத்தைக் காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை. எனவேதான், அவருடைய ஆன்மிக அரசியலை அவர் தெளிவுபடுத்தட்டும்.

தமிழ்நாடு, பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி; இந்தப் பகுத்தறிவினுடைய வேரை வெட்டுவதற்கு எந்த சக்திகள் முனைந்தாலும், அந்த சக்திகளை காலூன்றாமல் தடுப்பது எங்களைப் போன்றவர்களுடைய பணியாக எதிர்காலத்தில் அமையும்.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருப்பது நல்லது. ஏனென்று கேட்டால், அவருடைய பலம் என்னவென்று அவர் புரிந்துகொள்ளவேண்டியது மிக முக்கியம். 234 தொகுதிகள் என்ன? இந்தியா முழுவதும் போட்டியிட்டாலும் நல்லதுதான்'' என்று வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x