Published : 12 Dec 2017 09:15 AM
Last Updated : 12 Dec 2017 09:15 AM

முதல்கட்டமாக நடந்துவந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: சின்னமலை - டிஎம்எஸ் இடையே 3 மாதங்களில் ரயில் சேவை

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நேற்று நிறைவடைந்தன. இதற்கிடையே, சின்னமலை - டிஎம்எஸ் இடையே அடுத்த 3 மாதங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், முதல்தடத்தில் சின்னமலை - விமான நிலையம் வரையிலும், 2-வது தடத்தில் நேரு பூங்கா - பரங்கிமலை வரையிலும் தற் போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - எழும்பூர் - நேரு பூங்கா இடையே பணிகள் நிறைவடைந்து, விரைவில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. அண்ணா சாலையில் சைதாப்பேட்டை - டிஎம்எஸ் வரை சுரங்கம் தோண்டும் பணி கள் முடிந்து, ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

மே தின பூங்காவில் இருந்து டிஎம்எஸ் வரை நடந்துவரும் 2 சுரங்கப்பாதைகளில் கடந்த மாதம் ஒரு சுரங்கப்பாதை தோண்டும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், மற்றொரு சுரங்கப்பாதை தோண்டும் பணியை ராட்சத இயந்திரம் நேற்று வெற்றிகரமாக முடித்து வெளியேறியது. மெட்ரோ ரயில் அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘2013-ல் தொடங்கிய சுரங்கம் தோண்டும் பணி தற்போது முடிந்துள்ளது. இதற்கிடையே, சின்னமலை - டிஎம்எஸ் இடையே இந்த மாத இறுதியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளோம். 2018 மார்ச்சில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையே இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ரயில் பாதைகள், சிக்னல் அமைப்பது உள்ளிட்ட பணிகளை அடுத்தடுத்து முடிக்கவுள்ளோம். அடுத்த ஆண்டு இறுதியில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்’’ என்றார்.

சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ள நிலையில், முதல்தளத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கீழ்தளத் தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. குறிப்பாக, டிக்கெட் கவுன்ட்டர், குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள், காற்றோட்ட வசதி, தானியங்கி சிக்னல், தீ மற்றும் புகையை அணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. தற்போதைய நிலவரப்படி சுமார் 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளை அடுத்த 6 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x