Last Updated : 28 Aug, 2023 11:58 PM

 

Published : 28 Aug 2023 11:58 PM
Last Updated : 28 Aug 2023 11:58 PM

ராசிபுரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து: மூவர் காயம்

சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்

நாமக்கல்: ராசிபுரம் வி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதி்யை சேர்ந்தவர் கண்ணன் (42), இவர் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாட்டு வெடி, வான வெடிகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்கான வெடிமருந்து குடோன், பட்டாசு தயாரிப்பு ஆலை பட்டணம் மாசிலா தோட்டம் பகுதியில் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தொழிற்சாலையில் தயாரித்து நாட்டு வெடிகளை ராசிபுரம் வி.நகர் 11-வது தெருவில் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் வைத்துள்ளார். வீட்டில் மனைவி சுபத்ரா (40), மகள்கள் ஹர்சவர்ஷினி (18), ஹன்சிகா (10) ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில், திங்கட்கிழமை இரவு கண்ணன் வீட்டில் கொசு அடிக்கும் பேட் வைத்துக்கொண்டு கொசு அடித்துள்ளார். அப்போது அதிலிருந்து வந்த தீப்பொறி நாட்டு வெடிகள் மீது பட்டு வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் வெடி சத்தம் பல மீட்டர் தொலைவிற்கு கேட்டுளளது. அதிர்ந்து போன அப்பகுதியினர் வீட்டை விட்டு வெறியேறினர்.

தொடர்ச்சியாக நாட்டு வெடிகள் வெடித்த படியே இருந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சிறிது தூரத்தில் தீயணைப்பு நிலையம் இருந்த நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தந்தனர். மேலும் மின்சாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் சிக்கியிருந்த பெண்கள் பத்திரமாக கயிறுகட்டி மீட்டனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்த கண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, வட்டாட்சியர் சரவணன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் உடனடியாக நேரில் சென்று மேற்கொண்டு தீபரவாமல் தடுக்கும் பணிகளை முடிக்கிவிட்டனர். மேலும் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அனுமதியின்றி வெடி மருந்துகளை குடியிருப்பு பகுதியில் வைத்திருந்தது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்தார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x