

கோவை: கோவை மாநகர காவல்துறையுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட வடவள்ளி, துடியலூர் காவல் நிலையங்களை ‘ஹெவி’ காவல் நிலையங்களாக மேம்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.
கோவை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த துடியலூர், வடவள்ளி காவல் நிலையங்கள் நிர்வாக வசதிக்காக மாநகர காவல் துறையுடன் கடந்த 23-ம் தேதி இணைக்கப்பட்டன. வடவள்ளி காவல் நிலையம் முன்பு மாவட்ட காவல்துறையில் ‘லைட் ’ தரத்தில், தொண்டா முத்தூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சர்க்கிள் காவல் நிலையமாக இயங்கியது.
துடியலூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் ‘மீடியம்’ தரத்திலான காவல் நிலையமாக இயங்கியது. கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறும்போது,‘‘மாவட்ட காவல்துறையுடன் ஒப்பிடும்போது, மாநகர காவல் நிர்வாகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புச் சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கும்.
இதற்கேற்ப, தற்போது இணைக்கப்பட்ட வடவள்ளி, துடியலூர் காவல் நிலையங்களையும் தரம் உயர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக, லைட், மீடியம், ஹெவி என மூன்று தரநிலையில் காவல் நிலையங்கள் பிரிக்கப்படும். ‘லைட்’ தரமுடைய காவல் நிலையத்தில் 30 பேரும், ‘மீடியம்’ தரமுடைய காவல் நிலையத்தில் 50 பேரும், ‘ஹெவி’ தரமுடைய காவல் நிலையத்தில் 80 பேரும் பணியில் இருக்க வேண்டும்.
தற்போது வடவள்ளி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் தலைமையிலும், துடியலூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலும் இயங்குகிறது. எனவே, பெறப்படும் புகார்கள், எல்லைகளின் பரப்பு, மக்கள் நெருக்கம் அதிகரிப்பு, ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டிய சூழல், எல்லையோர பாதுகாப்பு மேம்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு இக்காவல் நிலையங்களை தரம் உயர்த்த மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் கூறும்போது,‘‘வடவள்ளி மற்றும் துடியலூர் காவல் நிலையங்களை ‘ஹெவி’ காவல் நிலையங்களாக தரம் உயர்த்த வலியுறுத்தி அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டு காவல் நிலையங்களிலும் தலா 80 காவலர்கள் இருக்கும் வகையில் தரம் உயர்த்தப்படும்’’ என்றார்.